Published : 04 Mar 2021 09:36 AM
Last Updated : 04 Mar 2021 09:36 AM
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்கும் இந்திய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து ஒருபோட்டியிலும் வென்றுள்ளன. 4-வது போட்டியில் யாருக்கு வெற்றி என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணி தொடரில் முன்னணியில் இருந்தாலும், இந்த போட்டியை டிரா செய்தாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதியாகிவிடும், வெற்றி பெற்றால் கூடுதல் சிறப்பாக அமையும்.
அதேசமயம், இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதில் சிக்கலாகும். ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுவிடும். ஆதலால், இந்த டெஸ்ட் போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை வெல்லாவிட்டாலும் கூட, சமன் செய்துவிடுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் ரூட் சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் பிராட் ஆகியோருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் டாம் பெஸ், லாரன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியத் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றவகையில் அணியில் எந்த மாற்றமும் இல்லை.
ஆடுகளம் எப்படி?
அமதாபாத் ஆடுகளம் குறித்து 3-வது போட்டியில் கடும் சர்ச்சை எழுந்தது. தரமற்ற ஆடுகளம், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது என்று இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்தனர். ஆனால், அந்த ஆடுகளத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆடுகளம் நன்றாக சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதில் மாற்றமில்லை.ஆனால், கடந்த போட்டியைப் போல் 2 நாட்களில் ஆட்டம் முடியாது. பேட்ஸ்மேன்களுக்கும் நன்கு ஒத்துழைக்கும் , ஆட்டத்தில் ஸ்வரஸ்யம் இருக்கும் என எதிர்பார்க்கலாம். சுழற்பந்துவீச்சு நன்கு கனித்து ஆடி நிலைத்துவிட்டால் இந்த ஆடுகளத்தில் நல்ல ஸ்கோர் செய்ய வாய்ப்பு உண்டு.
இந்தியா வலிமை
இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி 50 விக்கெட்டுகளை இழந்து 669 ரன்கள்சேர்த்துள்ளது. சராசரியாக 13 ரன்களுக்கு ஒரு வி்க்கெட்டை இங்கிலாந்துஅணி இழந்துள்ளது. இந்திய அணி 40 விக்கெட்டுகளை இழந்து 1000 ரன்கள் குவித்துள்ளது. சராசரியாக 25 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது இந்திய அணி. ஆதலால், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய அணியினர் சிறப்பாக விளையாடியுள்ளனர், இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியவி்ல்லை என்பதையே காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT