Published : 03 Mar 2021 04:04 PM
Last Updated : 03 Mar 2021 04:04 PM
மேக்ஸ்வெலின் அசுரத்தனமான பேட்டிங், ஆஸ்டன் அகரின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சு ஆகியவற்றால், வெலிங்டனில் இன்று நடந்த 3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசச்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.
முதலில் பேட்டிங் செய்தஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 17.1 ஓவர்களில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்து 64 ரன்களில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூஸிலாந்து அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வென்று தொடரை உயிர்ப்புடன் வைத்துள்ளன.
ஐபிஎல் டி20தொடரில் ஆர்சிபி அணியால் ரூ.14.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸி.வீரர் மேக்ஸ்வெல் கடந்த இரு போட்டிகளிலும் பேட்டி்ங்கில் சொதப்பி விமர்சனத்துக்கு ஆளாகினார். ஆனால், இந்தப் போட்டியில் அசுரத்தனமாக காட்டடி பேட்டிங்கை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் 31 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் கணக்கில் 8பவுண்டரி, 5 சிக்ஸர் அடங்கும். பவுண்டரி, சிக்ஸர் மூலம் மட்டும் 62 ரன்களை மேக்ஸ்வெல் சேர்த்தார், வெறும் 8 ரன்கள் மட்டுமே மேக்ஸ்வெல் ஓடி எடுத்துள்ளார்.
பந்துவீச்சில் பட்டையக் களப்பிய சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டன் அகர், 4 ஓவர்கள் வீசிய 30 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூஸிலாந்து அணியின் சரிவுக்கு காரணமாகினார். ஆட்டநாயகன் விருதையும், அகர் வென்றார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் 27 இன்னிங்ஸ்களுக்குப்பின் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து, 44 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர், 8 பவுண்டரி அடங்கும். 2வது விக்கெட்டுக்கு ஜோஸ் பிலிப், பின்ச் கூட்டணி 83 ரன்கள் சேர்த்தனர். ஜோஸ் பிலிப் 27 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல், பின்ச் 3-வது விக்கெட்டுக்கு, 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து அணித் தரப்பில் சோதி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூஸிலாந்து களமிறங்கியது. ஆஸி. அணியின் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் மெரிடித் தொடக்கத்திலேயே ஷீபர்ட்(4), வில்லியம்ஸன்(9) விக்கெட்டை சாய்த்து அதிர்ச்சி அளித்தார்.
அதன்பின் 3-வது விக்கெட்டுக்கு கப்தில், கான்வே ஜோடி ஓரளவுக்கு நிலைத்து ஆடியது. இருவரும் 42 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கப்தில் 43 ரன்னில் ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் நியூஸிலாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நியூஸிலாந்து அணி அடுத்த 35 ரன்களுக்குள்மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது. கான்வே (38) பிலிப்ஸ்(13) நீஷம்(0), சாப்மேன்(18),சவுதி(5), ஜேமிஸன்(11) ஆகியோர் அகரிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
17.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 144 ரன்களுக்கு ஆட்டமிழந்து 64ரன்களில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் அகர் 6 விக்கெட்டுகளையும் மெரிடித்2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT