Published : 01 Mar 2021 04:39 PM
Last Updated : 01 Mar 2021 04:39 PM
இந்திய ஒருநாள் அணியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக், அஸ்வினுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின் அற்புதமான ஃபார்மில் இருந்தார். ஆஸி. தொடரில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
இங்கிலாந்துக்கு எதிராகச் சென்னையில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வினின் பங்களிப்பு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் சதம் அடித்து அசத்தினார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
டெஸ்ட் தொடருக்கான வீரர் அஸ்வின் என முத்திரை குத்தப்பட்டு அவரை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்கிறது. கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அஸ்வின் விளையாடினார். ஜூலை 9-ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடியதுதான் அஸ்வின் கடைசியாகப் பங்கேற்றதாக இருந்தது.
அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக அஸ்வினுக்கு ஒருநாள், டி20 அணியில் பங்கேற்க இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இருப்பினும் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுவரும் அஸ்வின் தனது பங்களிப்பை முழுமையாக அளித்து ஒருநாள், டி20 போட்டிக்கும் தகுதியானவர் என்பதை நிரூபித்து வருகிறார்.
இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் அஸ்வின் அணிக்குள் தேர்வு செய்யப்படுவது புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஸ்வினை ஒருநாள் அணிக்குள் சேர்க்க வேண்டும் என ஏற்கெனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆதரவு அளித்திருந்தார்.
இந்நிலையில் இதேக் கருத்தை ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக்கும் தெரிவித்துள்ளார்.
ஆஸி. வீரர் பிராட் ஹாக்கிடம் ட்விட்டரில் ஒரு ரசிகர், இந்திய ஒரு அணியில் அஸ்வின் மீ்ண்டும் வருவாரா எனக் கேட்டார்.
அதற்கு பிராட் ஹாக் அளித்த பதிலில் " நிச்சயமாக அஸ்வினை, இந்திய ஒரு நாள் அணிக்குள் கொண்டுவர வேண்டும்.
அவ்வாறு அஸ்வின் அணிக்குள் வந்தால் மிகப்பெரிய பலமாக மாறும். நன்ராக பேட்டிங் செய்யக்கூடியவர் அஸ்வின், பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாக வீசி, எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார், குறிப்பாக டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவே சிறப்பாக பந்துவீசக்கூடியவர் அஸ்வின். எந்தப் போட்டியானாலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர்,
கட்டுக்கோப்பாக பந்துவீசக்கூடியவர் அஸ்வின். அவரை நிச்சயம் இந்திய ஒரு நாள் அணிக்குள் கொண்டுவர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT