Published : 27 Feb 2021 06:56 PM
Last Updated : 27 Feb 2021 06:56 PM
அகமதாபாத் ஆடுகளத்தைப் பற்றிப்பேசுவதைவிட, அங்கு நாங்கள் விளையாடிய விளையாடிய விளையாட்டின் தரத்தைப் பற்றிப் பேசுங்கள். பிங்க் பந்து டெஸ்ட் குறித்து எந்தக் கவலையும் எங்களுக்கு இல்லை என இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தெரிவித்தார்.
அகமதாபாத்தில் நடந்த 3-வதுடெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. டெஸ்ட் போட்டி தொடங்கிய 2-வது நாளிலேயே ஆட்டம் முடிந்ததால் ஆடுகளத்தின் தரம் குறித்து இங்கிலாந்து வீரர்களும், இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால், இந்திய அணியின் கேப்டன் கோலி ஆடுகளத்தில் எந்தத் தவறும் இல்லை, இரு அணிகளிலும் பேட்ஸ்மேன்களின் மோசமான செயல்பாடுதான் என்று தெரிவித்தார். ரோஹித் சர்மா, கூறுகையில் " ஆடுகளத்தில் எந்த பேயும், பிசாசும் இல்லை" என்று தெரிவித்தார்.
ஆடுகளம் குறித்துத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் தமிழக வீரர் அஸ்வின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ஆடுகளம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், அவர்களின் கருத்துக்கள் சரியா, தவறான என்று நான் சொல்வதற்கு இல்லை.
ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் ஆடுகளம் என்பது வீரர்களின் கையில் இல்லை. எதற்காக இப்படி ஆடுகளத்தைப் பற்றியே மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள். இதற்கு முன் இதேபோன்று நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஆடுகளத்தின் தன்மைபற்றி அதிகமாகப் பேசப்பட்டதா, மற்ற நாடுகளிலும் இதேபோல் 2 நாட்களிலும் 3 நாட்களிலும் டெஸ்ட் போட்டி முடிந்துள்ளதே அப்போது பேசப்பட்டதா.
நியூஸிலாந்துக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியி்ல் இங்கிலாந்து 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இந்திய அணி 36 ரன்னில் ஆஸ்திரேலியாவில் ஆட்டமிழந்தது. அப்போது பேசப்படவில்லையே. பிங்க் பந்தில் இதுபோன்று குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழப்பது இயல்பான ஒன்று.
மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களின் கை சற்று ஓங்கியே இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது, கடந்த கால புள்ளிவிவரங்களும் இதைத்தான் காட்டுகின்றன. பேட்ஸ்மேன்கள் குறைவான தவறு செய்வார்கள் என்று சொல்வது கடினம்.
இதேபோன்ற சம்பவம்தான் மேற்குவங்கத்தில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் நடந்தது. ஆதலால் பிங்க் பந்து டெஸ்ட் போட்டி எங்களுக்குக் கவலை ஏதும் இல்லை. அவ்வாறு ஏதேனும் எங்களுக்குக் கவலை இருந்திருந்தால், பிசிசிஐ அமைப்பிடம் நாங்கள் தெரிவித்திருப்போம்.
இதுவரை சிவப்பு பந்தில்தான்டெஸ்ட் போட்டி விளையாடி வந்தோம். இப்போது பிங்க் பந்தில் புதிதாக விளையாடும்போது, சில சிரமங்கள் இருக்கும். பிங்க் பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளையாடுவதில் சிரமம் ஏதும் இல்லை, பந்தைப் பார்ப்பதிலும் சிரமம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆடுகளத்தைப் பற்றிப் பேசும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அகமதாபாத் டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்களுக்கான ஆட்டம், பந்துவீச்சாளர்கள் வென்றுள்ளார்கள், பேட்ஸ்மேன்கள் அதிகமாக ஸ்கோர் செய்வது அவசியம்.
நல்ல ஆடுகளம் என்று யார் முடிவு செய்வது. முதல்நாள் வேகப்பந்துவீச்சு எடுக்கும், அடுத்த இருநாட்கள் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும், கடைசி இரு நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். ஆடுகளத்துக்கு யார் விதிகளை வகுத்தது கூறுங்கள். 3-வது டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் நன்றாக இருந்திருந்தால் இதுபோன்று கேள்விகளைக் கேட்பீர்களா. ஆடுகளம் குறித்து இதுவரை எந்த இங்கிலாந்து வீரர்களும் புகார் தெரிவிக்கவில்லை. நல்ல கிரிக்கெட் போட்டி மீது நம்பிக்கை வையுங்கள், ஆடுகளத்தின் மீது அல்ல.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT