Published : 27 Feb 2021 02:01 PM
Last Updated : 27 Feb 2021 02:01 PM
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குத் தகுதி பெறுவதற்கு 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அல்லது டிரா செய்வது அவசியமாகும்.
இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் சென்னை, அகமதாபாத் மைதானங்கள் அனைத்தும், சுழற்பந்துவீச்சாளர்களுக்குத்தான் சாதகமாக இருந்தன. பெரிய அளவுக்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இல்லை. மேலும், பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பும்ராவின் பந்துவீச்சு அவசியம் என்பதால், அவருக்கு சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. 3-வது டெஸ்ட் போட்டியிலும் பும்ரா அதிகமான ஓவர்களை வீசவில்லை.
4-வது டெஸ்ட் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படும் சூழலில், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், "இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகத் தன்னை விடுவிக்குமாறு பும்ரா கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பும்ராவுக்கு பதிலாக எந்த வீரரும் புதிதாகச் சேர்க்கப்படவில்லை. பும்ரா இல்லாத சூழலில், முகமது சிராஜ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT