Published : 27 Feb 2021 01:43 PM
Last Updated : 27 Feb 2021 01:43 PM
நமது ராணுவ வீரர்களின் உயிர்தான் முக்கியம். அவர்களின் உயிரோடு ஒப்பிடும்போது கிரிக்கெட் ரொம்ப சின்ன விஷயம். ஆதலால், எல்லை தாண்டிய தீவிரவாதம் முடியும்வரை பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளைக் கண்காணிக்கும் சர்வதேச நிதித்தடுப்புக் குழு (எப்ஏடிஎப்) சமீபத்தில் எடுத்த நடவடிக்கையின்படி, பாகிஸ்தானைத் தொடர்ந்து ஜூன் மாதம்வரை க்ரே (சாம்பல் நிறம்) லிஸ்ட்டில் வைத்துள்ளது.
தீவிரவாதத்துக்கு நிதியுதவியைத் தடுக்கும் நடவடிக்கையை இன்னும் பாகிஸ்தான் தீவிரப்படுத்தவில்லை எனக் கூறி இந்த நடவடிக்கையை எப்ஏடிஎப் எடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்
அவர் கூறியதாவது:
''எல்லை தாண்டிய தீவிரவாதம் முடிவுக்கு வரும்வரை, நாம் பாகிஸ்தானுடன் எந்தவிதமான உறவும் வைக்கக் கூடாது. எல்லாவற்றையும் விட நமது ராணுவ வீரர்களின் உயிர்தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட்டை விட, நமது ராணுவத்தினர்தான் முக்கியம். அவர்கள் உயிர்தான் பிரதானம். வீரர்களின் உயிரோடு ஒப்பிட்டால் கிரிக்கெட் ரொம்ப சின்ன விஷயம்.
ஆதலால், எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும்வரை, அந்த நாட்டுடன் எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது".
இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்தார்.
அகமதாபாத் ஆடுகளம் குறித்து விமர்சனங்கள் எழுந்தது குறித்து கம்பீரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் பதில் கூறுகையில், "அகமதாபாத் ஆடுகளம் குறித்து நான் ஏதும் கூற முடியாது. இது ஐசிசி பார்த்து முடிவு எடுக்க வேண்டிய விஷயம். அதேசமயம், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், தங்களின் பேட்டிங் உத்தி குறித்தும் சிறிது சிந்திக்க வேண்டும்" என்று கம்பீர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT