Last Updated : 26 Feb, 2021 08:12 PM

1  

Published : 26 Feb 2021 08:12 PM
Last Updated : 26 Feb 2021 08:12 PM

'காட்டடி வீரர்' யூசுப் பதான் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்; சச்சினைத் தோளில் சுமந்த தருணங்கள் மறக்க முடியாதவை: கம்பீருக்கு உருக்கமான நன்றி

2011 உலகக் கோப்பையை வென்றபோது, சச்சினைச் சுமந்து சென்ற யூசுப் பதான்.

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட்டில் அதிலும் டி20 போட்டிகளில் பிக் ஹிட்டர்ஸ் வரிசையில் முக்கியமாகக் கருதப்பட்ட யூசுப் பதான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.

யூசுப் பதானின் சகோதரர் இர்பான் பதான் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பையை இந்திய அணி முதன்முதலாக வென்ற அணியில் இருந்த யூசுப் பதான், 2011-ம் ஆண்டு தோனி தலைமையில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற அணியிலும் பதான் இடம் பெற்றிருந்தார்.

யூசுப் பதான் 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 810 ரன்களைச் சேர்த்துள்ளார். 2 சதங்கள், 3 அரை சதங்களை அடித்துள்ளார். 22 டி20 போட்டிகளில் விளையாடிய பதான், 236 ரன்கள் சேர்த்துள்ளார், 146 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான பதான், ஒருநாள் போட்டிகளில் 33 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக 2012-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றிருந்த யூசுப் பதான், அதன்பின் இடம் பெறவில்லை. ஐபிஎல் போட்டித் தொடர்களில் மட்டும் யூசுப் பதான் கவனம் செலுத்தி வந்தார்.

இதுவரை சன்ரைசர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்காக 174 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள யூசுப் பதான் 3,204 ரன்கள் சேர்த்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 143 வைத்துள்ளார். இதில் ஒரு சதம், 13 சதங்கள் அடங்கும், 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் எனும் பெருமையைப் பதானுக்கு உண்டு. ஐபிஎல் தொடரில் இதுவரை 16 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டும் 300 சிக்ஸர்களை விளாசியுள்ள பதான் 2009-10ஆம் ஆண்டில் துலீப் டிராபி போட்டியில் 536 ரன்களை சேஸிங் செய்தபோது 210 ரன்கள் சேர்த்திருந்தார்.

யூசுப் பதான் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''எனக்கான நேரம் முடிவுகக்கு வந்துவிட்டது. என் வாழ்க்கையில் கிரிக்கெட் இன்னிங்ஸுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் முறைப்படி ஓய்வு பெறுகிறேன்.

என் குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள், அணியினர், பயிற்சியாளர்கள், அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் இந்திய அணியின் ஜெர்ஸியை நான் அணிந்த முதல் நாள், என் மனதுக்குள் இன்னும் பசுமையாக இருக்கிறது. நான் ஜெர்ஸியை மட்டும் அணியவில்லை. ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்பார்ப்புகளையும் என் தோளில் சுமந்ததாகவே கருதினேன்.

2 உலகக் கோப்பையை வென்றதும், சச்சினை என் தோளில் அமரவைத்துச் சுமந்த நாட்கள் என் வாழ்க்கையில் பொன்னான தருணங்கள். தோனியின் தலைமையில்தான் நான் இந்திய அணியில் அறிமுகமானேன். ஷேன் வார்னே தலைமையில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானேன்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தபோது, எனக்கு வாய்ப்புகளை வழங்கிய கேப்டன் கவுதம் கம்பீர், என் சகோதரர் இர்பான் பதான் ஆகியோரை மறக்க முடியாது. அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
தேசத்துக்காக விளையாட வாய்ப்பளித்த பிசிசிஐ, பரோடா கிரிக்கெட் அமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கிறேன்".
இவ்வாறு பதான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x