Published : 26 Feb 2021 01:38 PM
Last Updated : 26 Feb 2021 01:38 PM
அகமதாபாத் போன்ற ஆடுகளம் டெஸ்ட் போட்டி நடத்தத் தகுதியான ஆடுகளம் இல்லை என்று முன்னாள் வீரர்கள் பலர் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான பகலிரவு மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.
இரு நாட்களில் நடந்து முடிந்துள்ள இந்த டெஸ்ட் போட்டியில் இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 30 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. இதில் 11 விக்கெட்டுகளை அக்ஸர் படேலும், 7 விக்கெட்டுகளை அஸ்வினும் வீழ்த்தினர். கிரிக்கெட் உலகில் ஒரு டெஸ்ட் போட்டியில் மிகக் குறைவாகப் பந்து வீசப்பட்டு ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளதில் 2-வது போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.
இரு மிகப்பெரிய அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் போட்டி இரு நாட்டு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால், 2 நாட்களில் போட்டி முடிந்துவிடும் வகையில் ஆடுகளத்தை அமைத்திருப்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.
முன்னாள் வீரர் வி.வி.எஸ் லட்சுமண் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "டெஸ்ட் போட்டி நடத்துவதற்கு அகமதாபாத் மைதானம் தகுதியானது அல்ல. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "டெஸ்ட் போட்டிக்கு அகமதாபாத் ஆடுகளம் சரியானது அல்ல. இங்கிலாந்து அணி 200 ரன்கள் அடித்திருந்தால், இந்திய அணி பல்வேறு சிரமங்களை முதல் இன்னிங்ஸில் எதிர்கொண்டிருக்கும். ஆனால், இந்த ஆடுகளம் இரு அணியினருக்கும் பொதுவானதாகவே இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "2 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துள்ளதால், இது சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இருவரும் அகமதாபாத் மைதானத்தில் பந்துவீசியிருந்தால், அவர்கள் இந்த நேரத்தில் 800 முதல் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்கள். எப்படியாயினும் அருமையாகப் பந்துவீசிய அக்ஸர் படேலுக்கு வாழ்த்துகள். அஸ்வின், இசாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "இந்த மாதிரி ஆடுகளங்களை நாம் பார்த்தால் அது எவ்வாறு இருக்கும் என்பதற்கு என்னிடம் பதில் இருக்கிறது. எங்களுக்கு இதுபோன்ற ஆடுகளங்களில் 3 இன்னிங்ஸ் தேவைப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மட்டுமே ஆடுகளத்துக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், "பேட்ஸ்மேன்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது மனநிலையைப் பொருத்தது. இந்த ஆடுகளத்தில் ரோஹித் சர்மா, கிராலி அரை சதம் அடிக்கவில்லையா? இங்கிலாந்து அணி களத்தில் நிற்பதைத்தான் பார்த்தார்களே தவிர, எவ்வாறு ரன் அடிப்பது பற்றிச் சிந்திக்கவில்லை. தேய்ந்த பந்தை அருமையாகக் கையாண்டதற்கு அக்ஸர் படேலுக்கு வாழ்த்துகள். அஸ்வின், அக்ஸர் படேலும் சிறப்பாகச் செயல்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் மைக்கேல் ஸ்வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " இதுபோன்ற சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக ஆடுகங்களில் ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொண்டு டெஸ்ட் போட்டி விளையாட முடியாது. ஒரு சுழற்பந்துவீச்சாளருடன் இந்தியாவுக்கு வரவும் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT