Published : 26 Feb 2021 01:17 PM
Last Updated : 26 Feb 2021 01:17 PM
அகமதாபாத் போன்ற ஆடுகளத்தில் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங்கை பந்துவீசச் செய்தால், 800 முதல் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ள யுவராஜ் சிங், கடைசியில் அக்ஸர் படேலுக்கும், அஸ்வினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது அவர்களின் திறமையைக் குறைத்து மதிப்பிட்டுச் சீண்டியுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.
அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான பகலிரவு மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது.
இரு நாட்களில் நடந்து முடிந்துள்ள இந்த டெஸ்ட் போட்டியில் இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 30 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன. இதில் 11 விக்கெட்டுகளை அக்ஸர் படேலும், 7 விக்கெட்டுகளை அஸ்வினும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை அக்ஸர் படேல் வென்றார்.
அதுமட்டுமல்லாமல், தமிழக வீரர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 400-வது விக்கெட்டை இந்த டெஸ்ட்டில் வீழ்த்தினார். அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்றும், உலக அளவில் 2-வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.
இரு மிகப்பெரிய அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிந்துள்ளதால், ஆடுகளத்தின் தன்மை குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆடுகளத்தை மட்டும் குறை சொல்வதோடு மட்டுமல்லாமல், அஸ்வின், அக்ஸர் படேலின் திறமையையும் கேள்விக்குள்ளாக்கி கருத்து தெரிவித்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.
யுவராஜ் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "2 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்துள்ளதால், இது சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் இருவரும் அகமதாபாத் மைதானத்தில் பந்து வீசியிருந்தால், அவர்கள் இந்த நேரத்தில் 800 முதல் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்கள். எப்படியாயினும் அருமையாகப் பந்துவீசிய அக்ஸர் படேலுக்கு வாழ்த்துகள். அஸ்வின், இசாந்த் சர்மாவுக்கும் வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆடுகளத்தைப் பற்றிக் குறைசொல்லிவிட்டு, இந்த ஆடுகளத்தில் ஹர்பஜன், கும்ப்ளேவுக்கு வாய்ப்பு கொடுத்தால், ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்று கூறியுள்ளதன் மூலம், அஸ்வின், அக்ஸர் படேலின் திறமையை குறைத்து மதிப்பிடுவதாக சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT