Published : 25 Feb 2021 05:02 PM
Last Updated : 25 Feb 2021 05:02 PM
ஜோ ரூட், ஜேக் லீச் ஆகியோரின் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், அகமதாபாத்தில் நடந்துவரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 145 ரன்களில் சுருண்டது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்திருந்தது இந்திய அணி. இன்று பிற்பகலில் ஆட்டம் தொடங்கிய நிலையில், கூடுதலாக 46 ரன்கள் சேர்த்து மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்தது.
2-வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி அக்ஸர் படேல் வீசிய முதல் ஓவரிலேயே கிராலி (0), பேர்ஸ்டோ (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 114 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைத்தான் இழந்திருந்தது. ஆனால், அடுத்த 31 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் மிகச்சிறந்த பந்தவீச்சாளர் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ரூட் பந்துவீச்சைக் கூட சமாளிக்க முடியாமல் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்துள்ளதை என்னவென்று சொல்வது? ஆடுகளத்தைக் குறை சொல்வதா, இந்திய பேட்ஸ்மேன்களைக் குறை சொல்வதா எனத் தெரியவில்லை.
பகுதிநேரப் பந்துவீச்சாளரான ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரூட் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை ஆடுகளத்தை அமைத்தது போன்றே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து இந்திய அணி கையைச் சுட்டுக்கொண்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்திலாவது ஓரளவுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர். அஸ்வின் சதம் அடித்தார். ஆனால், அகமதாபாத் ஆடுகளம் அதைவிட மோசமாக இருக்கிறது.
இந்த ஆடுகளத்தில் 3 நாட்கள் முதல் மூன்றரை நாட்கள் வரை போட்டி நடந்தாலே பெரிய விஷயம். இதுபோன்ற தரமற்ற ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டி எந்த நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது எனத் தெரியவில்லை. கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் ஸ்வான், மாண்டி பனேசரிடம் இந்திய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்ததைப் போல் இந்த முறையும் பேக் ஃபயர் ஆகப்போகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்திருந்தது. இன்று கூடுதலாக 20 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 46 ரன்கள் கூடுதலாகச் சேர்த்து ஆட்டமிழந்தது.
ரோஹித் சர்மா 57 ரன்களிலும், ரஹானே ஒரு ரன்னிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் மட்டுமே இருவரும் பேட் செய்தனர்.
ரஹானே 7 ரன்களில் லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். 114 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அடுத்த சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா 66 ரன்கள் சேர்த்த நிலையில் லீச் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். ரிஷப் பந்த் (1), அஸ்வின் (17), வாஷிங்டன் சுந்தர் (0), அக்ஸர் படேல் (0), பும்ரா (1) என வரிசையாக ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
52.3 ஓவர்களில் 145 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT