Last Updated : 24 Feb, 2021 06:58 PM

1  

Published : 24 Feb 2021 06:58 PM
Last Updated : 24 Feb 2021 06:58 PM

அக்ஸர் 6 விக்கெட்; அஸ்வின் அசத்தல்: இங்கிலாந்து 112 ரன்களில் சுருண்டது: 50 ஆண்டுகளில் 6-வது முறை

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்ஸர் படேல் : படம் உதவி ட்விட்டர்

அகமதாபாத்


அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரின் மாயஜாலப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அகமதாபாத்தில் நடந்துவரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112 ரன்களில் ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 48.4 ஓவர்களில் 112 ரன்களில் ஆட்டமிழந்தது. அக்ஸர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து சரிவுக்கு முக்கியக் காரணமாகினர்.

80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த இங்கிலாந்து அணி அடுத்த 32 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இங்கிலாந்து அணியில் அதிகட்சமாகவும், ஆறுதல் தரும் விதத்தில் தொடக்க ஆட்டக்காரர் கிராலி அரைசதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

50 ஆண்டுகளில்

கடந்த 50 ஆண்டுகளி்ல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து செல்வது இது 6-வதுமுறையாகும். கடைசியாக 2019ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக லாட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 23.4 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதன்பின் இந்தியாவிடம் 50 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்துள்ளது. இதுவரை மே.இ.தீவுகள் அணியிடம் 2 முறையும், ஆஸி.யிடம் ஒருமுறையும், தென் ஆப்பிரி்க்காவிடம் ஒருமுறையும் முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களுக்குள் இங்கிலாந்து சுருண்டுள்ளது.

இதுக்காகவா டாஸ் வென்றார்கள்

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்தின் 112 ரன்கள் ஸ்கோர் நிச்சயம் இந்தியாவுக்கு சவாலான ஸ்கோரக இருக்கப்போவதில்லை. இதற்காகத்தான் டாஸ் வென்று முதலி்ல் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தார்களா என்ற கேள்வி எழுகிறது.

80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அதைத்தொடர்ந்து சுழற்பந்துவீச்சாளர்கள் அளித்த நெருக்கடி, அழுத்தத்தை தாங்கமுடியாமல் விக்கெட்டை தக்கவைக்கும் நோக்கில் ஆடி ஆட்டமிழந்தனர். தடுப்பாட்டை கைவிட்டு வழக்கமான ஆட்டத்தை கையாண்டிருந்தால், ஓரளவுக்கு ரன்களை இங்கிலாந்து சேர்த்திருக்கலாம்.

இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளில் 9 விக்கெட்டுகளை இந்திய சுழற்பந்துவீச்சாளர்களே எடுத்திருப்பதால், லீச்சுக்கு அதிகமான வேலைப்பளு இருக்கும்.

அஸ்வின், அக்ஸர் மிரட்டல்

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பும்ரா, இசாந்த், அஸ்வின், அக்ஸர்படேல் 4 பேரும் இங்கிலாந்து அணிக்கு தொடக்கதில் இருந்தே நெருக்கடி தரும் விதத்தில் துல்லியமாகப் பந்துவீசினர். அஸ்வின், அக்ஸர் இருவரும் லைன் லென்த்தை விட்டு பந்தை நகற்றாமல் பந்துவீசினர்.

இங்கிலாந்து அணி இழந்த 10 விக்கெட்டில் 3 விக்கெட் மட்டுமே மற்ற வீரர்களால் கேட்ச் பிடிக்கப்பட்டது. மற்ற 7 விக்கெட்டுகளும் போல்ட், எல்பிடபிள்யு முறையில்தான் பறிபோயின.

இசாந்த் சர்மா 3-வது ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்தார். ஆடுகளத்தில் பந்து நன்றாக சுழல்வதால், சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது.

தொடக்கமே அதிர்ச்சி

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கிராலே,சிப்ளே ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கி இசாந்த் சர்மா வீசிய 3-வது ஓவரில் ஸ்லிப் திசையில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து சிப்ளே டக்அவுட்டில் வெளியேறினார்.2 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்தது.

அடுத்துவந்த பேர்ஸ்டோ, கிாாலேயுடன் சேர்ந்தார். பேர்ஸ்டோ ஆபத்தானவர், நின்றுவிட்டால் ஸ்கோரை பெரிதாக உயர்த்திவிடுவார் என்பதால், தொடக்கத்தில் இருந்தே பேர்ஸ்டோவுக்கு நெருக்கடியாகப் பந்துவீசினர்.

அக்ஸர் படேல் வீசிய முதல் பந்தில் பேர்ஸ்டோ கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். 27-ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.

3-வது விக்கெட்டுக்கு ரூட், கிராலே ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களைச் சேர்த்தனர். ரூட் பொறுமையாக பேட் செய்ய, கிராலே அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து 68பந்துகளி்ல் அரைசதம் அடித்தார்.

அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அஸ்வினின் பந்துவீச்சுக்கு ரூட் தொடக்கத்திலிருந்தே தடுமாறினார். ரூட் 17ரன்கள் சேர்த்திருந்தபோது, அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

அடுத்து வந்த ஸ்டோக்ஸ், கிராலேயுடன் சேர்ந்தார். அரைசதம் கடந்து ஆடிவந்த கிராலே 53 ரன்னில் அக்ஸர் படே்ல பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். 80 ரன்களுக்கு 4-வது விக்கெட்டை இங்கிலாந்து பறிகொடுத்தது.

தேநீர் இடைவேளை
தேநீர் இடைவேளியின் போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்திருந்தது.

தேநீர் இடைவேளைக்குப்பின் வந்தபின் இங்கிலாந்து அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 31 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து இழந்தது.

.அஸ்வின் பந்துவீச்சில் போப் ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.அக்ஸர் படேல் வீசிய ஓவரில் ஸ்டோக்ஸ் 6 ரன்னில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். ஜோப்ராஆர்ச்சர் 11 ரன் சேர்த்திருந்தபோது, அக்ஸர் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்துவந்த லீச், 3 ரன்கள் சேர்த்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்டூவர்ட் பிராட் 3 ரன்னில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பென் ஃபோக்ஸ் 12 ரன்கள் சேர்த்த நிலையில் படேல் பந்துவீச்சில் போல்டாகினார். 48.4 ஓவர்களில் 112 ரன்களில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x