Last Updated : 22 Feb, 2021 04:55 PM

 

Published : 22 Feb 2021 04:55 PM
Last Updated : 22 Feb 2021 04:55 PM

4 நாள் 'லேட்டா' அடிச்சுட்டிங்களே; ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாத கான்வே புதிய சாதனை: அஸ்வின் பாராட்டு

ஆஸிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய நியூஸி வீரர் கான்வே : படம் உதவி ட்விட்டர்

கிறிஸ்ட்சர்ச்

ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நியூஸிலாந்து வீரர் டேவன் கான்வேயின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்து நியூஸிலாந்தில் குடியேறிய கான்வே கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் 59 பந்துகளில் 99 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 79 நிமிடங்கள் களத்தில் நங்கூரமிட்ட கான்வே 10பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை விளாசினார்.

5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற கான்வேயின் ஆட்டம் முக்கியக் காரணமாகும்.

கான்வேயின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்த இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " டிவன் கான்வே, 4 நாட்கள் தாமதமாக அடித்துவிட்டீர்களே ஆனாலும், என்ன அடி.." எனப் பாராட்டியுள்ளார்.

29வயதான கான்வே, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்து பின்னர் நியூஸிலாந்துக்கு குடியேறியவர். நியூஸிலாந்து அணிக்குள் அறிமுகமாகிய கான்வே, டி20 போட்டிகளில் தொடர்ந்து அடிக்கு 5-வது அரைசதம் இதுவாகும். இதற்கு முன் 93, 91, 69, 50 ரன்கள் சேர்த்துள்ளார்.

கடந்த 18-ம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் நியூஸிலாந்து வீரர் கான்வே பதிவு செய்திருந்தார். ஆனால், அவரை எந்த அணி நிர்வாகத்தினரும் வாங்கவில்லை. ஐபிஎல் தொடரில் கண்டுகொள்ளப்படாத கான்வே, அதன்பின் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸிக்கு எதிராக நொறுக்கி எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கான்வே, அந்நாட்டின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் 8 ஆண்டுகள் ஆடியவர். கடந்த 2017-ம் ஆண்டுதான் நியூஸிலாந்து குடியுரிமை பெற்று கான்வே குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டு நியூஸிலாந்து அணியில் இடம் பெற்ற கான்வே, மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 29 பந்துகளில் 41 ரன்கள் விளாசி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

இதுவரை டி20 போட்டிகளில் கான்வே 272 ரன்கள் குவித்து, 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். சராசரி 91 ரன்களாகும்.

டி20 போட்டியில் தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்த பெருமை பெற்ற இந்தியாவின் சேவாக், ஜிம்பாப்வேயின் ஹேமில்டன் மசகாட்ஸா, பாகிஸ்தானின் கம்ரான் அக்மல், இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், ஆஸ்திரேலயாவின் டேவிட் வார்னர் ஆகியோரோடு கான்வாயும் சேர்ந்துவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x