Published : 21 Feb 2021 10:56 AM
Last Updated : 21 Feb 2021 10:56 AM
இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள டி20 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபிஎல் தொடரில் கலக்கிய சூர்யகுமார் யாதவ், ராகுல் திவேஷியா, இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியுடன் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 19 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தேர்வுக்குழு நேற்று அறிவித்தது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் அனைத்தும் அகமதாபாத் மொட்டீரா மைதானத்தில்தான் நடைபெற உள்ளது.
காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த புவனேஷ்வர் குமார் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியும், ஆஸ்திரேலியத் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என்ற ஆதங்கத்தோடு இருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸின் அதிரடி ஆல்ரவுண்டர் ராகுல் திவேஷியா, மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான இஷான் கிஷன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழக வீரர்கள் டி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ், சஞ்சு சாம்ஸன், மணிஷ் பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
முகமது ஷமிக்கும், ரவிந்திர ஜடேஜாவுக்கும் காயம் முழுமையாக குணமடையாததால், அவர்கள் அணிக்குள் சேர்க்கப்படவில்லை.
இதில் ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய வேகப்பந்துவீ்ச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல் மட்டுமல்லாது, விஜய் ஹசாரேக் கோப்பையையில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 173 ரன்கள் குவித்த இளம் வீரர் இஷான் கிஷன் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலயாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு,இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டிலும் கலக்கி வரும் ரிஷப் பந்த் மீண்டும் டி20 அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய டி20 அணியில் விளையாடிய அக்ஸர் படேல் 3 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.
காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெறாமல் போன சுழற்பந்துவீச்சாளர் வருண்சக்ரவர்த்தி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சுக்கு புவனேஷ்வர் குமார், நடராஜன், தீபக் சாஹர், ஹர்திக்பாண்டியா, நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் உள்ளனர். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன், ரிஷப்பந்த் இடம் பெற்றுள்ளனர்.
சுழற்பந்து வீச்சுக்கு சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேஷியா ஆகியோர் உள்ளனர்.
பேட்ஸ்மேன்களாக மட்டும் கேப்டன் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் உள்ளனர்.
இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவண், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், இஷான் கிஷன், யஜுவேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேஷியா, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT