Published : 20 Feb 2021 06:45 PM
Last Updated : 20 Feb 2021 06:45 PM
ஜெகதீசனின் அபாரமான சதம், ஷாருக்கானின் அதிரடி அரைசதம் ஆகியவற்றால், இந்தூரில் நடந்த, விஜய் ஹசாரே கோப்பைக்கான முதல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி.
விஜய் ஹசாரே கோப்பைப்கான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகளில் தமிழகஅணியும், பஞ்சாப் அணியும் இந்தூரில் மோதின.
முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. 289 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 6 பந்துகள் மீதம் இருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 103 பந்துகளில் 101 ரன்கள் சேர்த்துஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள்,14 பவுண்டரிகள் அடங்கும். ஜெகதீசனுக்கு துணையாக ஆடிய பாபா அபராஜி்த் 88 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
கடைசி நேரத்தில் களமிறங்கிய அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 36 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் இதில் ஒரு சிக்ஸர், 7பவுண்டரி அடங்கும். பாபா இந்திரஜித் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இவர்கள் மூவரும்தான் தமிழக அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.
பந்துவீச்சில் தமிழக அணியில் பெரிதாகச் சொல்லும் அளவில் யாரும் பந்துவீசவில்லை. முருகன் அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 77 ரன்களை வாரி வழங்கினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிமாறன், முகமது, சோனு யாதவும்கூட ரன்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசவில்லை.
பஞ்சாப் அணியைப் பொருத்தவரை குர்கீரத்மான் 121 பந்துகளில் 139 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும். இது தவிர பிரப்சிம்ரன் 71 ரன்களும், சன்வீர் சிங் 58 ரன்களும் சேர்த்து குறிப்பிடத்தகுந்த பங்களிப்புச் செய்தனர். மற்ற வீரர்களான மன்தீப் சிங்(3), அபிஷேக் சர்மா(5)ஆகியோர் சொற்ப ரன்னில்ஆட்டமிழந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT