Last Updated : 20 Feb, 2021 04:28 PM

 

Published : 20 Feb 2021 04:28 PM
Last Updated : 20 Feb 2021 04:28 PM

ஆஸி. ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்

சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ஒசாகா : படம் உதவி ட்விட்டர்

மெல்போர்ன்


மெல்போர்னில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதற்கு முன் கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஒபனில் சாம்பியன் பட்டத்தை ஒசாகா வென்றுள்ளார்.

மெல்போர்னில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர்பிரிவு இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் பிராடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை ஒசாகா கைப்பற்றினார்.

ஒசாகாவுக்கு ஒட்டுமொத்தமாக 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம், ஆஸ்திரேலிய ஓபனில் பெறும் 2-வது பட்டமாகும்.

ஜப்பானில் பிறந்த ஒசாகா, தனது 3-வது வயதிலேயே அமெரிக்காவுக்கு குடும்பத்தோடு குடிபெயர்ந்தனர்.

23 வயதான ஒசாகா, கடந்த 2020ம் ஆண்டில் ஏ.பி. செய்தி நிறுவனத்தின் சிறந்த தடகள வீராங்கனைக்கான விருதை வென்றார். கடந்த சீசனில் தொடர்ந்து 21 போட்டிகளில் ஒசாகா வென்றுள்ளார். அதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டமும் அடங்கும். இதற்கு முன் 2018ல் யுஎஸ் ஓபனையும் ஒசாகா வென்றுள்ளார்.

இந்த ஆண்டில் நடந்த முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒசாகா இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பங்கேற்கபதற்காக ஆஸ்திரேலியாவுக்கு ஜனவரி மாதமே ஒசாகா வந்துவிட்டார். ஆனால், ஒசாகா பயணித்த விமானத்தில் வந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருந்ததால், ஒசாகா பயிற்சியில் ஈடுபடமுடியாமல் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த தனிமைப்படுத்துதலுக்குப்பின்புதான் ஒசாகா பயிற்சியில் ஈடுபட்டு தற்போது சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

தொடக்கத்திலிருந்து தனது இயல்பான, வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒசாகா முதல் செட்டில் 4 கேம்களை விட்டுக்கொடுத்தார், அடுத்த செட்டிலும் 3 கேம்களை மட்டுமே கொடுத்து செட்டைக் கைப்பற்றினார். இந்த இரு செட்களிலும் 6 வலிமையான ஏஸ்களை வீசி பிராடியை திணறவிட்டார்.

ஆடவருக்கான ஒற்றையர் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டம் நாளை நடக்க உள்ளது. இந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோக்கோவிச்சை எதிர்த்து டேனில் மெத்வதேவ் மோதுகிறார். ஜோக்கோவிச் இந்த பட்டத்தை வென்றால் அது 18-வது கிராண்ட்ஸ்லாமாகவும், 9-வதுஆஸி ஓபன் பட்டமாகவும் அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x