Published : 20 Feb 2021 02:21 PM
Last Updated : 20 Feb 2021 02:21 PM
இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியில் சாம் கரன் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்திலிருந்து அகமதாபாத்துக்கு வருவதில் சாம் கரனுக்கு பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், அவர் அடுத்தவரும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியில் விளையாடிய சாம் கரன், அந்தத் தொடர் முடிந்தவுடன் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. திட்டமிடப்பட இந்தியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்ட்போட்டிகளில் சாம்கரன் விளையாட அகமதாபாத் வந்திருக்க வேண்டும்.
அதற்கு ஏற்றார்போல் பேர்ஸ்டோ, மார்க் உட் இருவரும் திட்டமிட்டு அகமதாபாத் வந்து, பயோபபுள் சூழலுக்குள் வந்துவிட்டார்கள். ஆனால், சாம் கரனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஓய்வுக் காலமும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நீட்டிக்கப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் சூழலில் சாம் கரன் சிக்கியுள்ளதால், அவரால் அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தகவல்கள் கூறுகையில் " திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கு சாம் கரன் வந்திருக்க வேண்டும். ஆனால், பிரிட்டனில் இருந்து அகமதாபாத்துக்கு நேரடியாக எந்த விமானங்களும் இல்லை. தனியாக விமானத்தை அமர்த்தி சாம் கரனை அழைத்துவரும் சூழலும் இல்லை.
மற்ற பயணிகள் வரும் விமானத்தில் சாம் கரன் வந்தாலும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என அச்சம் நிலவுகிறது. இந்தியா வந்தபின் அவரை தனிமைப்படுத்துவதிலும், இங்கிலாந்து அணியில் சேர்வதிலும் சிக்கல் இருக்கிறது. ஆதலால், அடுத்துவரும் 2 டெஸ்ட் போட்டிகளில் சாம் கரன் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. வரும் 26-ம் தேதிக்குள் இங்கிலாந்து ஒரு அணியில் வேண்டுமானால் சாம் கரன் இணைந்து கொள்வதற்குத்தான் வாய்ப்புள்ளது " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT