Published : 18 Feb 2021 05:04 PM
Last Updated : 18 Feb 2021 05:04 PM
சென்னையில் நடந்து வரும் 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவை ரூ.ஒரு கோடி ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி விலைக்கு வாங்கியது.
நியூஸிலாந்து வீரரும், பிக்பாஷ் லீ்க்கில் சிட்னி தண்டர் அணியில் ஆடிய ஆடம் மில்னேவை ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி.
14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் சென்னையில் ஐடிசி சோழா ஹோட்டலில் நடந்து வருகிறது. ஏலம் தொடங்கியதிலிருந்து முக்கிய வீரர்கள் விலைபோகாமல் இருக்கிறார்கள். ஆனால், எதிர்பாராத வீரர்கள் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறார்கள்.
மேக்ஸ்வெலை எடுக்க கடும் போட்டி ஏற்பட்ட நிலையில் அவரை ரூ.14 கோடிக்கு ஆர்சிபி அணியும், கிறிஸ் மோரிஸை ரூ.16 கோடிக்கும் அதிகமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விலைக்கு வாங்கின.
இது ஒருபுறம் இருக்க, இங்கிலாந்து வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேஸன் ராய், ஆஸி. வீரர்கள் அலெக்ஸ் கெரே, வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், இலங்கை வீரர் குஷால் பெரேரா, சாம் பில்லிங்ஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன்வரவில்லை.
நியூஸிலாந்து வீரரும் சிட்னி தண்டர் அணியில் விளையாடிய ஆடம் மில்னேவுக்கு அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தில் மில்னே பெயர் அறிவிக்கப்பட்டதும், மும்பை அணி ரூ.70 லட்சத்துக்கும், பின்னர் ரூ.ஒரு கோடிக்கும் கேட்டது.
ஆனால், மில்னேவை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடுமையாகப் போட்டியிட்டன. மில்னேவுக்கு ரூ.2 கோடி வழங்குவதாக மும்பை அணி அறிவித்தது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியும் சேர்ந்ததால் போட்டி கடுமையானது. இறுதியாக ரூ.3.2 கோடிக்கு மில்னேவை மும்பை அணி விலைக்கு வாங்கியது.
கடந்த முறை ஆர்சிபி அணியில் இருந்த உமேஷ் யாதவ் இந்த முறை விடுவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.ஒரு கோடி அடிப்படை விலை வைக்கப்பட்டது. உமேஷ் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும், அவரை ரூ.ஒரு கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி விலைக்கு எடுத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT