Last Updated : 17 Feb, 2021 10:03 AM

 

Published : 17 Feb 2021 10:03 AM
Last Updated : 17 Feb 2021 10:03 AM

அகமதாபாத் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன: ஐபிஎல் போட்டியைக் காண ரசிகர்களுக்கு  அனுமதியா?- கங்குலி பதில்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி : கோப்புப்படம்

கொல்கத்தா

அகமதாபாத்தில் வரும் 24-ம் தேதி நடைபெறும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. 50 சதவீதம் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படும் சூழலில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி உள்ளன.

அதேநேரம், கிரிக்கெட் போட்டிகளைக் காண மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகிரித்து இருப்பதால், ஏப்ரல் மாதம் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியைக் காண ரசிகர்களை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.

அகமதாபாத்தில் அமைக்கப்பட்டு மொட்டீரா கிரிக்கெட் மைதானம் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாகும். இந்த மைதானத்தில் வரும் 24-ம் தேதி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது டெட்ஸ் போட்டி நடக்க உள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இதனால் 3-வது டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியைக் காண 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“அகமதாபாத்தில் நடக்க இருக்கும் பகலிரவு டெஸ்ட்போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.

மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பாக நான் ஜெய்ஷா உடன் பேசினேன். அவரும் டெஸ்ட் போட்டியைக் காண ஆர்வமாக இருக்கிறார். 7 ஆண்டுகளுக்குப் பின் அகமதாபாத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது.

கடந்த ஆண்டு கொல்கத்தாவில் முதல் பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நடந்தது. அனைத்து இருக்கைகளிலும் ரசிகர்கள் அமர்ந்து போட்டியைக் காண வேண்டும் என விரும்பினோம். டி20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் வர வேண்டும்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்களா, அல்லது 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். நிச்சயமாக இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய போட்டியாக ஐபிஎல் இருக்கும்.

ஐபிஎல் ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது மினி ஏலம் என்றாலும், சில அணிகளுக்கு இது பெரியதாக இருக்கும். பல இடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே அணிகள் இந்த முறை அதிகமாகப் பணியாற்ற வேண்டியது இருக்கும்.

இனிமேல், இந்தியாவில் டெஸ்ட் தொடர் நடந்தாலே, அதில் குறைந்தபட்சம் ஒரு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நடத்துவது எனக் கொண்டுவரப்படும். ஒவ்வொரு தலைமுறையும் மாறி வருகிறது. டெஸ்ட் போட்டியின் தோற்றத்தை பிங்க் பந்து மாற்றும், டெஸ்ட் போட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்கும்”.

இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x