Published : 02 Nov 2015 03:32 PM
Last Updated : 02 Nov 2015 03:32 PM
தான் சச்சின் டெண்டுல்கர் பற்றி கூறியது அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கூறப்பட்டதே, ஆனால் அது தவறான கோணத்தில் விளக்கமளிக்கப்பட்டது என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
மும்பை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது கிரிக்கெட் ஆட்ட வகையறாவையும் கபில் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.
சச்சின் டெண்டுல்கரால் இரட்டைச் சதம், முச்சதம், நாற்சதங்களை எடுக்க முடியவில்லை எனவும், மும்பை வகையறா கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் தேங்கி விட்டது என்றும், தன்னால் ஆலோசனை வழங்க முடிந்திருந்தால் சேவாக் போல் விளையாடக் கூறியிருப்பேன் என்றும் ரிச்சர்ட்ஸ் போல் பவுலர்களுக்கு கருணை காட்டாத வீரராக அவர் இருந்திருக்க வேண்டும் என்றும் கபில் தேவ் கலீஜ் டைம்ஸில் கூறிய கருத்து பல விமர்சனங்களுக்கு ஆளானது.
இந்நிலையில் கபில்தேவ் தனது கருத்து குறித்து கூறும்போது, “கபில் தேவ் இன்னொரு டெஸ்ட் அரைசதம் எடுக்க மாட்டார்” என்று சுனில் கவாஸ்கர் கூறுவதுண்டு. அவர் என் நல்லதுக்குத்தான் அப்படி கூறினார். நான் அடுத்த போட்டியில் அரைசதம் அடித்தேன் (பாகிஸ்தானுக்கு எதிராக மும்பையில் 79 பந்துகளில் 69 ரன்கள்), அதன் பிறகு சென்னையிலும் ஒரு அரைசதம் அடித்தேன். (98 பந்துகளில் 84 ரன்கள், 11 விக்கெட்டுகள், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்திய போட்டியாகும் அது)
நான் மேலும் 5,000 ரன்களை எடுத்திருக்க வேண்டும் என்பார் கவாஸ்கர். நான் இன்னும் எனது பேட்டிங்கை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை நான் இப்போது ஓப்புக் கொள்கிறேன். ஆனால், கவாஸ்கரின் இந்தக் கருத்துகளை நான் தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவில்லை, எனக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே நான் அதனை கருதினேன்.
தேவையற்ற சர்ச்சையை உருவாக்கிய சச்சின் பற்றிய கருத்து பற்றி என்ன கூறுகிறீர்கள்?
'தேவையற்ற' என்பதுதான் இங்கு சரியான வார்த்தை. நான் சச்சின் டெண்டுல்கரை எப்போதும் விலைமதிப்பற்ற கிரிக்கெட் வீரர் என்றே கூறிவந்துள்ளேன். விவ் ரிச்சர்ட்ஸை விடவும் திறமை வாய்ந்தவர். கருணையற்ற முறையில் பேட் செய்வதற்கான திறமை அவரிடம் இருந்தது. ஆனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு அவர் அளிக்கவில்லை என்றே கருதுகிறேன். அவர் 100 சதங்களை எடுத்துள்ளார், ஆனால் அவரது ஆற்றல் இவற்றையெல்லாம் விட பெரியது.
வேறு எப்படி நான் அவரை வர்ணிக்க முடியும்? அவர் தனது திறமைக்கேற்ப சாதிக்கவில்லை என்பது அவர் மீதான புகழுரைதான். இன்னும் நன்றாக அவர் விளையாடியிருக்க முடியும். நான் கூறுவது தவறா?
சச்சின் அலைகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலத்தில் நான் அவருக்கு எதிராக பந்து வீசினேன். என் பந்தை அவர் மிட் ஆஃபில் சிக்சர் அடித்தார். நான் ஏதோ ஆஃப் ஸ்பின்னர் போல் அவர் அடித்தார். நான் சற்று ஆடித்தான் போனேன். அவரது திறமை என்னை வியக்க வைத்தது.
சச்சின் அவரது காலத்தையும் விஞ்சி நிற்கும் வீரர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவர் எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக வந்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அவ்வாறு அவர் வரவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஷார்ஜாவில் 1998-ல் அவர் ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடியது என் நினவில் உள்ளது, அத்தகைய சச்சினை நான் நேசிக்கிறேன். அவரது ஆதிக்கம் முழுமையாக இருந்தது. அதிரடி ஆட்டமும் பிரமாதம்.
நல்ல பவுலர்களை சாதாரண பவுலர்களாக அவரது ஆட்டம் தோன்றச் செய்யும். நினைத்தபடிக்கு அவரால் பவுண்டரி அடிக்க முடியும். ஆனால் அவரது கரியர் முன்னேற்றம் கண்ட போது அத்தகைய ஆதிக்கத் தன்மை அவரிடம் இல்லை. அதனை அவர் எங்கோ இழந்து விட்டார்.
மும்பை கிரிக்கெட் வீரர்கள் பற்றி...
மும்பை கிரிக்கெட் வீரர்களின் திறமையை நான் சந்தேகப்பட்டால் நான் ஒரு முட்டாளாகவே கருதப்பட வேண்டியவன். மும்பை அணி 40 ரஞ்சி போட்டிகளில் சாம்பியனாகியுள்ளனர். 15 முறை தொடர்ச்சியாக வென்றுள்ளனர். இது ஒரு ஆச்சரியகரமான சாதனையே.
மும்பைக்கு வெளியேயிருந்து வரும் வீரர்கள் மும்பை வீரர்களைப் பார்த்துதான் தொழில் நேர்த்தியக் கற்றுக் கொண்டனர். பாம்பே பேட்ஸ்மென்கள் சரியான உத்தியில் ஆடுவதை விரும்புபவர்கள். உத்தி ரீதியான உச்சமே அவர்களது சிறப்பு. ரிவர்ஸ் ஸ்வீப், அப்பர் கட் கிடையாது. ஆனால் இப்போது ஆட்டம் மாறிவிட்டது, இனி கருணையற்ற முறையில் ஆடத்தான் வேண்டும்.
சந்தீப் பாட்டீல், ஓரளவுக்கு வினோத் காம்ப்ளி நீங்கலாக மும்பை, கருணையற்ற விதத்தில் பேட்டிங் ஆடும் வீரர்களை உருவாக்கவில்லை. தற்போது ரோஹித் சர்மா, ரஹானே வந்துள்ளனர். இவர்கள் பேட்டிங் வித்தியாசமானது, ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர்.
மும்பை கிரிக்கெட்டை நான் மதிக்கிறேன், இந்திய கிரிக்கெட் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர்கள் அவர்களே. ஆனால் ஆட்டம் இப்போது மாறிவிட்டது. அதனை நான் ஏற்றுக் கொள்ளும் நேரம் வந்து விட்டது.
நாம் பிராந்தியவாதத்தைத் தாண்டி நாம் வளர வேண்டியுள்ளது. மும்பை என்னுடையதும்தான். மும்பை கிரிக்கெட்டும், மும்பை கிரிக்கெட் வீரர்களும் அடுத்தக்கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். மும்பை, ஹரியாணா, டெல்லி என்று கிடையாது, இது இந்திய கிரிக்கெட் பற்றிய விவகாரமாகும். மேலும் அஜித் வடேகர் சார், நான் உண்மையான இந்தியன் மும்பை நம்முடைய பகுதி. நானும் பாம்பேவாசிதான்.
போதும் என்ற மனம் ஒருவருக்கு காலத்தில் வந்து விடும், ஆனால் சச்சினைப் பொறுத்தவரையில் போதும் என்று நாம் நினைத்து விட முடியாது. அவர் மேன்மேலும் மதிப்புமிக்கவர், இதைத்தான் நான் கூறினேன்.
இளைய சகோதரர் பற்றி மூத்த சகோதரர் ஒருவர் தான் நினைத்ததை கூறக் கூடாதா? நான் அதைத்தான் செய்தேன்.
இவ்வாறு கூறினார் கபில்தேவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT