Published : 16 Feb 2021 02:38 PM
Last Updated : 16 Feb 2021 02:38 PM
சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. அடுத்த போட்டிக்கு இப்போதிருந்தே தயாராகிறோம் என்று சொல்லாமல் சொல்லி 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய மொயின் அலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர் தாயகம் புறப்படுகிறார். முதல் இரு டெஸ்ட் போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த பேர்ஸ்டோ, மார்க் உட் இருவரும் 3-வது போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்றது. இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்று சமநிலையில் இருக்கின்றன. 3-வது டெஸ்ட் போட்டி பகலிரவாக அகமதாபாத்தில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற அடுத்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஃபைனலுக்கு முன்னேறுவது கடினம். அதேசமயம், இங்கிலாந்து அணி அடுத்த இரு போட்டிகளையும் வெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
இதையடுத்து, 3-வது டெஸ்ட் போட்டிக்கு இப்போதே தயாராகும் வகையில் 17 வீரர்கள் கொண்ட அணியை இங்கிலாந்து அணி இன்று அறிவித்துள்ளது. 3-வது டெஸ்ட் போட்டியில் மொயின் அலி இல்லை. வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட், பேட்டிங்கை வலிமைப்படுத்த பேர்ஸ்டோ அணிக்குள் வருகின்றனர்.
காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஜோப்ரா ஆர்ச்சர், ஓய்வில் இருந்த ஆன்டர்ஸன் களத்தில் வருகின்றனர். பேர்ஸ்டோ கூடுதல் பேட்ஸ்மேனாகவோ அல்லது விக்கெட் கீப்பராகவோ அணிக்குள் வரலாம். அகமதாபாத் ஆடுகளம் மிதவேகப் பந்துவீச்சுக்கும், ஸ்விங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால், மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம். இருவருமே ஓரளவுக்கு பேட்டிங் செய்யக்கூடியவர்கள்.
3-வது டெஸ்ட் போட்டிக்கான அணி:
ஜோ ரூட் (கேப்டன்), ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ்,ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராளி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒலே போப், பென் ஸ்டோக்ஸ், ஒலே ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT