Last Updated : 16 Feb, 2021 01:45 PM

 

Published : 16 Feb 2021 01:45 PM
Last Updated : 16 Feb 2021 01:45 PM

இந்தியா பதிலடி: அஸ்வின், படேல் சுழலில் சுருண்டது இங்கி. மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் கோலி படை சாதனை

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு காரணமாக அமைந்த அஸ்வின், அக்ஸர் படேல் : படம் உதவி ட்விட்டர்

சென்னை

ரவிச்சந்திர அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சால் சென்னையில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளிலேயே இந்திய அணிக்கு அபாரமான வெற்றி கிடைத்துள்ளது. ஆடுகளம் குறித்து இங்கிலாந்து அணியினரும், முன்னாள் வீரர்களும் கடுமையாக விமர்சித்தனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவாறு இல்லை என்று விமர்சிக்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மாவின் சதம், அஸ்வினின் சதம், கோலி, ரிஷப்பந்த் ஆகியோரின் அரைசதம் ஆகியவை இந்திய ஆடுகளங்களை கணித்து ஆட வேண்டும் என்பதை நிரூபித்து, அவர்களின் குற்றச்சாட்டை பொய்யாக்கினர்.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. வரும் 24-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் தரவரிசையில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியது, இங்கிலாந்து அணி 4-வது இடத்துக்குச் சரிந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் நியூஸிலாந்துடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் மோத வாய்ப்புள்ளது

சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 227 ரன்களில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்தப் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது.

482 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 54.2 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்து 317 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய அக்ஸர் படேல் 20 ஓவர்கள் வீசி 60 ரன்கள் கொடுத்து தனது முதல் போட்டியிலயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளையும் , 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து 106 ரன்களில் ஆட்டமிழந்த அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அடித்த 161 ரன்கள் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட முக்கியக் காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

இந்திய உள்நாட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன், கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ராஜ்கோட்டில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதே அதிகபட்ச வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக இருந்தது. அந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் 2-வது இன்னி்ங்ஸில் மொயின் அலி சேர்த்த 43 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராகும். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 339 ரன்களும், இங்கிலாந்து அணி 134 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில் அஸ்வினின் அபாரமான சதத்தால், 286 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இதையடுத்து, 482 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்று இங்கிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

3-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் சேர்த்திருந்தது. லாரன்ஸ் 19 ரன்களிலும், ரூட் 2 ரன்களிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

லாரன்ஸ் 26 ரன்கள் சேர்த்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் சுழற்பந்து வீச்சை சமாளித்து பேட் செய்ய மிகவும் திணறினார். 51 பந்துகளைச் சந்தித்து 8 ரன்கள் அடித்த ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல், அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன்பின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. பென் ஃபோக்ஸ்(2) ரன்னில் படேல் பந்துவீச்சில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து ரூட் 33 ரன்னில் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஸ்டோன் டக்அவுட்டில் படேல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

90 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அடுத்த 36 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு மொயின் அலி, பிராட் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர். மொயின் அலி அதிரடியாக சிக்ஸர்,பவுண்டரி அடித்து ஸ்கோர் செய்தார். 18 பந்துகளில் 5 சிக்ஸர், 3பவுண்டரி உள்பட 43 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு மொயின் அலி ஆட்டமிழந்தார்.

54.2ஓவர்களில் 164ரன்களுக்கு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்து 317 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x