Published : 15 Feb 2021 12:28 PM
Last Updated : 15 Feb 2021 12:28 PM
உள்நாட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் ஹர்பஜன் சாதனையை முறியடித்த இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் அவரிடம் விளையாட்டாக மன்னிப்பு கோரியுள்ளார்.
உள்நாட்டில் ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சென்னையில் நடந்துவரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது, அஸ்வின் 266 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்பஜன் சாதனையை முறியடித்தார்.
உள்நாட்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தாற்போல் தற்போது அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
ரவிச்சந்திர அஸ்வின் நேற்று போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் கூறுகையில், “2001-ம் ஆண்டு டெஸ்ட் தொடரை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார். ஆனால், இப்போது இந்திய அணிக்காக விளையாடுவேன், சுழற்பந்துவீச்சாளராக வருவேன் என்று நான் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.
என்னுடைய மாநிலத்துக்கு நான் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் இருந்தேன். அதை நோக்கியே நகர முயன்றேன். ஆனால், இந்திய அணிக்குள் வருவேன், விளையாடுவேன் என நான் நம்பவில்லை.
அந்த நேரத்தில் என்னுடைய வயதில் இருந்த வீரர்கள், அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் நான் ஹர்பஜன் சிங் மாதிரி பந்துவீசுகிறேன், அவரின் பந்துவீச்சு ஸ்டைல் போலவே இருக்கிறது எனக் கிண்டல் செய்தனர்.
ஆனால், இந்திய அணியில் இடம் பெற்று, பந்துவீச்சாளராகி, ஹர்பஜன் சிங் சாதனையையே இன்று முறியடித்துள்ளேன் என்பது சிறப்பு. நான் களத்தில் இருந்தபோது எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சாரி..பஜ்ஜு பா…(மன்னியுங்கள் ஹர்பஜன்)’’ எனத் தெரிவித்துள்ளார்.
34 வயதாகும் அஸ்வின் இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 391 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்துவீச்சு சராசரியாக 25.26 வைத்துள்ளார். ஆனால், உள்நாட்டில் அஸ்வின் பந்துவீச்சு சராசரி 22.67 ஆக வைத்துள்ளார்.
இதுவரை அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 முறை 5 விக்கெட்டுகளையும், இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்திய அளவில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய வகையில் கும்ப்ளே (619) முதலிடத்திலும், கபில்தேவ் (434) 2-வது இடத்திலும், ஹர்பஜன் சிங் (417) 3-வது இடத்திலும், அஸ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர்.
புதிய வரலாறு:
இது தவிர அஸ்வின் புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 200 இடதுகை பேட்ஸ்மேன்களை எந்தப் பந்துவீச்சாளரும் ஆட்டமிழக்கச் செய்தது இல்லை. முதல் முறையாக இந்த வரலாற்றை அஸ்வின் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டை வீழ்த்தியபோது, 200 இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் எனும் பெருமையை அஸ்வின் பெற்றார். இதில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை மட்டும் 10 முறை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT