Published : 26 Nov 2015 11:10 AM
Last Updated : 26 Nov 2015 11:10 AM

3-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவின் பரிதாப பேட்டிங் - 79 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாளான நேற்று 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் முன்னிலை பெற்றது.

கடந்த போட்டிகளைப் போலவே இன்றும் சுழற் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் வேகமாக சரிந்து வீழ்ந்தது. நாளின் முதல் ஓவரிலேயே எல்கரின் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் தனது அடுத்த ஓவரில் ஆம்லாவின் விக்கெட்டையும் வீழ்த்தினார். மறுமுனையில் அஸ்வினுக்கு சரியாக ஈடுகொடுத்த ரவீந்திர ஜடேஜாவும் டி வில்லியர்ஸ், ப்ளெஸ்ஸி போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்க அணியில் டுமினி மட்டுமே சிறிது தாக்குப்பிடித்து ஆடி 35 ரன்களைக் குவித்தார். இதனால் தான் தென் ஆப்பிரிக்கா 50 ரன்களைக் கடந்தது. ஆனால் டுமினியின் ஆட்டமும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவின் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களின் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக உணவு இடைவேளைக்கு முன்னரே 79 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் முடிந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், மிஷ்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்தியாவிடம் மிகக்குறைந்த ரன் எண்ணிக்கையில் ஆட்டமிழந்த தென் ஆப்பிரிக்கா

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 79 ரன்களுக்குச் சுருட்டியதன் மூலம் எதிரணியினரை ஒரு இன்னிங்சில் ஆகக் குறைந்த ரன் எண்ணிக்கையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளது இந்திய அணி.

இதற்கு முன்னதாக 1990-ம் ஆண்டு இலங்கையை சண்டிகர் டெஸ்ட்டில் 82 ரன்களுக்குச் சுருட்டியதே குறைந்த ரன் எண்ணிக்கையாக இருந்தது.

100 ரன்களுக்குள் எதிரணியினரை இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 7 முறை சுருட்டியுள்ளது.

நாக்பூர் டெஸ்ட், இலங்கைக்கு எதிரான சண்டிகர் டெஸ்ட் உட்பட, 1981-ல் ஆஸ்திரேலியாவை 83 ரன்களுக்கு இந்தியா சுருட்டியுள்ளது. தென் ஆப்பிரிக்கா ஜோஹான்னஸ்பர்கில் இந்தியாவுக்கு எதிராக 84 ரன்களுக்குச் சுருண்டுள்ளது. மற்றும் வங்கதேசம் (91), ஆஸ்திரேலியா (93) நியூஸிலாந்து (94) ஆகியவையும் அடங்கும்.

ஹார்மருக்கு அஸ்வின் வீசிய தூஸ்ரா:

இன்று பந்துகள் இஷ்டம் போல் திரும்பின, வலது பக்கமும், இடது பக்கமும் திரும்பி எழும்பி தென் ஆப்பிரிக்காவுக்கு துர்சொப்பனமாக பிட்ச் அமைந்தது

ஹார்மருக்கு அஸ்வின் வீசிய ரவுண்ட் த விக்கெட் பந்து, லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகியது, ஹார்மர் அதனை லெக் திசையில் ஆட முயன்றார். பந்து லெக் திசையிலிருந்து லெக் ஸ்பின் பந்து போல் திரும்பி ஹார்மரின் காலில் பட்டு ஸ்டம்பை தொந்தரவு செய்தது. பெரிய பந்து அல்ல, ஆனால் பிட்ச் அப்படி உள்ளது என்றால் நாம் தென் ஆப்பிரிக்காவின் நிலைமையை ஊகித்துக் கொள்ளலாம்.

அதே போல் டேன் விலாஸ், ஜடேஜாவிடம் எதிர்கொண்ட பந்து விளையாட முடியாத பந்து, அவர் மிடில் அண்ட் லெக் ஸ்டம்பை கவர் செய்து மட்டையை சரியாக வைத்திருந்தும் பந்து லெக் ஸ்டம்ப் லைனிலிருந்து பந்து பயங்கரமாகத் திரும்பி அவர் மட்டையின் விளிம்பைத் தாண்டிச் சென்று பவுல்டு ஆனது

அதே போல் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கும் ஜடேஜா பந்து மைல்கணக்கில் திரும்பியது இதனால்தான் மட்டையின் முன்விளிம்பில் பட்டு ஜடேஜாவிடமே கேட்ச் ஆனது.

மற்றபடி எல்கர், ஆம்லா, டுபிளெஸ்ஸிஸ் அவுட் ஆனதற்கு பிட்ச் காரணமல்ல. எல்கர் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான ஷார்ட் பிட்ச் பந்தை கட் செய்ய முயன்று வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார். ஆம்லா தேவையில்லாத ஒரு அபாயகரமான ஸ்வீப் ஷாட்டில் அவுட் ஆனார்.

டுபிளெஸ்ஸிஸ் ஜடேஜாவின் பந்து திரும்பும் என்று ஆடினார் ஆனால் பந்து திரும்பவில்லை. மிகப்பெரிய ஷாட்டுக்குப் போனார். ஆனால் பந்து மட்டையைக் கடந்து நேராக ஸ்டம்பைத் தாக்கியது.

எனவே பிட்ச் பற்றிய பீதியே பாதிகாரணமாக அமைந்தது. கொஞ்சம் பொறுமையுடன், ஒன்றுமில்லை என்ற மனநிலையுடன் விளையாடி அவ்வப்போது பெரிய ஷாட்களை ஆடி, தடுப்பாட்டத்தை ஒரே முனையில் ஒருவரே ஆடாமல் ஒரு ரன்னை எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றி மாற்றி ஆடியிருந்தால் நிச்சயம் இவ்வள்வு மோசமான ஸ்கோரில் ஆல் அவுட்டாகியிருக்க மாட்டார்கள்.

பிட்ச் பற்றிய பீதியால் சாதாரண பந்துகள் கூட விக்கெட்டுகளைப் பெற்றுத் தந்தன. ஆனாலும் இத்தகைய பிட்ச்கள் டெஸ்ட் போட்டிக்கு எந்த வித நியாயமும் செய்யாது என்பதும் உறுதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x