Published : 13 Feb 2021 01:10 PM
Last Updated : 13 Feb 2021 01:10 PM
சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இருப்பது பிட்ச்(ஆடுகளம்) இல்ல பீச்(கடற்கரை ) என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கிண்டல் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 272 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோற்கடித்தது. சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் அமைக்கப்பட்டாலும், 3-வது நாளில் இருந்துதான் சுழற்பந்துவீச்சுக்கு கை கொடுத்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்கு கை கொடுக்கும் வகையில் ஆடுகளத்தை அமைத்துள்ளார்கள். மைதானத்தில் அதிகமான பிளவுகள் காணப்படுவதால், சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைக்கும்.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி யோசிக்காமல் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரில் ஸ்டோன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஷுப்மான் கில் வெளியேறினார். அடுத்து வந்த புஜாரா, ரோஹித் சர்மாவுடன் இணைந்து ஆடினார்.
புஜாரா நிதானமாக ஆட மறுபுறம் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி ரன்களைச் சேர்த்தார். 47 பந்துகளில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அரங்கில் 12-வது அரைசதமாக அமைந்தது.
புஜாரா நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 21 ரன்னில் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் கோலி 5 பந்துகளைச் சந்தித்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
37 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்துள்ளது.ரோஹித் சர்மா 90 ரன்களிலும், ரஹானே 21 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், சேப்பாக்கம் மைதானத்தை கிண்டல் செய்து ட்விட் செய்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ சேப்பாக்கம் ‘பீச்’சில் டாஸில் தோல்வி அடைந்து, இங்கிலாந்து இந்த டெஸ்ட் போட்டியை வென்றால், அது மறக்க முடியாத வெற்றியாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் ஆடுகளம்(பிட்ச்) என்று குறிப்பிடாமல் பீச் என்று மைக்கேல் வான் கிண்டல் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT