Published : 12 Feb 2021 01:36 PM
Last Updated : 12 Feb 2021 01:36 PM
2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலத்தில் சர்வதேச, உள்நாட்டு வீரர்கள் உள்பட 292 வீரர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீசாந்த் பெயர் நீக்கப்பட்டுள்ளது, அதேசமயம், 42 வயது வீரர் ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், சத்தேஸ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
2021-ம் ஆண்டுக்கான 14-வது ஐபிஎல் டி20 போட்டிக்கான மினி ஏலம் சென்னையில் வரும் 18-ம் தேதி நடக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்காக 8 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை கடந்த மாதமே அளித்துவிட்டன. மேலும், ஏராளமான வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.
ஒட்டுமொத்தமாக 1,114 சர்வதேச, உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதில் 8 அணிகளும் வீரர்களை பட்டியலை உறுதி செய்து 292 வீரர்களே ஏலத்தில் பங்கேற்க சம்மதித்துள்ளன. இதில் 164 இந்திய வீரர்கள், 115 வெளிநாட்டு வீரர்கள், 3 துணைநாடுகளின் வீரர்கள் என 292 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
தற்போதுள்ள நிலவரத்தின்படி, ஆர்சிபி அணி அதிகபட்சமாக 13 வீரர்களையும், அதைத் தொடர்ந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 9 வீரர்களையும் தேர்வு செய்ய முடியும். ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் தலா 8 வீரர்களையும், சன்ரைசர்ஸ் 3 வீரர்களையும் தேர்வு செய்ய முடியும்.
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் காலடி வைத்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்திருந்தார்.ஆனால், ஸ்ரீசாந்தை மீண்டும் ஏலப்பட்டியலி்ல் சேர்க்க 8 அணிகளின் நிர்வாகிகளுக்கும் விருப்பமில்லை என்பதால், அவரின் பெயர் நீக்கப்பட்டது. சயத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கேரள அணிக்காக ஸ்ரீசாந்த் விளையாடி திறமையை நிரூபித்த போதிலும் அவரின் பெயர் சேர்க்கப்படவில்லை.
சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. அவரின் பெயரை 8 அணிகளின் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.
42 வயதாகும் நயான் தோஷி பெயர் ஏலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச வயதுள்ள வீரராக தோஷி இருப்பார் எனக் குறிப்பிடலாம்.
இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் இருவருக்கு மட்டும் அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களில், மேக்ஸ்வெல், ஸ்மித், சகிப் அல் ஹசன், சாம்பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட்,மொயின் அலி ஜேஸன் ராய், மார்க் உட் ஆகியோர் ரூ.2 கோடி அடிப்படை விலைப் பட்டியலி்ல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரூ.1.50 கோடி அடிப்படையில் ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் ஆகியஇரு இந்திய வீரர்கள் உள்பட 12 வீரர்கள் சேர்்க்கப்பட்டுள்ளனர். ரூ.ஒரு கோடி அடிப்படை விலையில், 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சத்தேஸ்வர் புஜாராவுக்கு அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அடிப்படைய விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT