Published : 11 Feb 2021 11:20 AM
Last Updated : 11 Feb 2021 11:20 AM
மதரீதியாக வீரர்களைத் தேர்வு செய்திருந்தால் நான் பயிற்சியாளர் பதவியிலருந்து நீக்கப்பட்டிருப்பேன். ராஜினாமா செய்திருக்க மாட்டேன். மதரீதியாகச் செயல்படுவதாக என்னைக் குற்றம் சாட்டுவது வேதனையாக இருக்கிறது என்று உத்தரகாண்ட் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்த வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாபர் கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
உத்தரகாண்ட் அணியில் வீரர்களை மதரீதியான அடிப்படையில் தேர்வு செய்ய முயல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து வாசிம் ஜாபர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''நான் வீரர்களை மதரீதியாகத் தேர்வு செய்ய முயன்றேன் என்று உத்தரகாண்ட் மாநில கிரிக்கெட் செயலாளர் நவ்நீத் மிஸ்ரா, அணியின் மேலாளர் மகிம் வர்மா ஆகியோர் கூறும் குற்றச்சாட்டு வேதனையாக இருக்கிறது. நான் அணியில் முஸ்லிம் வீரர்களுடன் இணைந்து தொழுகை நடத்தியதை தொடர்புபடுத்திப் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதிலும் மதரீதியாகச் செயல்படுகிறேன் என்பது வேதனையாக இருக்கிறது.
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல. தீவிரமானவை. மதரீதியான சாயம் என் மீது சுமத்தப்படுவது எனக்கு வேதனையாக இருக்கிறது. என்னை கிரிக்கெட் வட்டாரத்தில் பல ஆண்டுகளாகப் பலருக்கும் தெரியும். நான் எப்படிப் பழகுவேன் என்பதும் தெரியும்.
நான் உத்தரகாண்ட் அணியில் திறமையின் அடிப்படையில்தான் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து தேர்வு செய்தேன். முஸ்டாக் அலி கோப்பையில் கூட சமது ஃபல்லா எனும் முஸ்லிம் வீரர் 4 போட்டிகளில் விளையாடினாலும் அவர் சரியாக விளையாடவில்லை என்பதால் நீக்கினேன்.
நான் மதரீதியாகப் பார்த்துச் செயல்படவில்லை. முகமது நசீம், சமத் ஃபல்லா ஆகியோரை அனைத்துப் போட்டிகளிலும் நான் விளையாட வைத்திருக்கலாம். ஆனால், திறமைக்குத்தான் முக்கியத்துவம் அளித்தேன். புதிய வீரர்களுக்கும், திறமையானவர்களுக்கும் வாய்பபு கிடைக்க வேண்டும் என விரும்பினேன்.
இவ்வாறு நான் செயல்பட்டது மதரீதியான செயல்பாடா? நான் ஜெய் பிஸ்தாவை கேப்டனாக நியமிக்க ஆலோசனை தெரிவித்தபோது, தேர்வுக்குழுவினர் இக்பால் அப்துல்லாவை நியமிக்கக் கோரினார்கள். அப்துல்லா திறமையானவர், ஐபிஎல் அனுபவம் இருக்கிறது என்று தெரிவித்தார்கள். அவர்களின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன்.
வீரர்கள் ஸ்ரீ ராம கோஷம் எழுப்பியதுபோது அதை நான் தடுத்ததாகக் கூறுவது அபத்தமாக இருக்கிறது. பரோடாவில் முஷ்டாக் அலி கோப்பைக்காக நாங்கள் சென்றபோது, வீரர்கள் அனைவரிடமும் நாம் பல்வேறு சமூகத்தினராக இருந்தாலும், உத்தரகாண்ட் மாநிலத்துக்காக வந்திருக்கிறோம். இனிமேல் நமது நோக்கம் உத்தரகாண்ட் வெற்றி பெற வேண்டும் என்றுதான் இருக்க வேண்டும் என்று கூறினேன். நான் ஸ்ரீ ராம கோஷத்தைத் தடுத்ததாகக் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் மதரீதியாகச் செயல்பட்டிருந்தால், அல்லாஹ் அக்பர் என்றுதானே அவர்களை முழக்கமிடச் சொல்லி இருக்க வேண்டும்
உத்தரகாண்ட் அணியில் முஸ்லிம் வீரர்கள் இருந்தனர். அவர்களுடன் நான் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். வெள்ளிக்கிழமை அன்று மட்டும் மவுலவி தொழுகைக்காக இஸ்பால் அப்துல்லா எனும் வீரர் அழைப்பின் பெயரில் வந்தார். அன்று ஒருநாள் மட்டும் நமாஸ் செய்வோம்.
நான் மதரீதியாகச் செயல்படுவதாக இருந்தால், காலை 9 மணிக்குப் பயிற்சி வைத்து 12 மணிக்கு முடித்து, 1.30 மணிக்கு நமாஸ் செய்யச் சென்றிருப்பேன். ஆனால், நாங்கள் நாள்தோறும் நண்பகல் 12 முதல் 12.30 வரை பயிற்சியில் ஈடுபடுவோம். வெள்ளிக்கிழமையில் மட்டும் இக்பால் அனுமதி பெற்று தொழுகைக்காகச் சென்றுவிடுவார்.
பயோ-பபுளுக்கு எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லாமல், 5 நிமிடங்கள் கூட்டாக நமாஸ் செய்வோம். ஆதலால் மதரீதியாக நான் செயல்பட்டேன் என்ற குற்றச்சாட்டு தீவிரமானது. அவ்வாறு குற்றம் சாட்டியிருந்தால், நான் ராஜினாமா செய்திருக்கமாட்டேன். என்னை உத்தரகாண்ட் நிர்வாகம் நீக்கியிருக்கும்.
உத்தரகாண்ட் கிரிக்கெட் நிர்வாகத்தின் தேர்வுக் குழுவில் நிர்வாகிகள் தலையீடு, தகுதியில்லாத வீரர்களை அணியில் சேர்ப்பது போன்றவை நடக்கின்றன. இதனை நான் எதிர்த்துப் பேசி, சுதந்திரமாகச் செயல்படக் கோரினேன். அதுமட்டுமல்லாமல் ஓராண்டு ஒப்பந்தம் முடியும் தறுவாயில் இருந்ததால், ராஜினாமா செய்தேன்''.
இவ்வாறு ஜாபர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT