Published : 06 Nov 2015 02:42 PM
Last Updated : 06 Nov 2015 02:42 PM
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார்.
அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் ஆனார் அஸ்வின்.
தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஸ்வின் எல்கார், வான் ஸில், ஆம்லா, டேன் விலாஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தனது 29-வது டெஸ்ட் போட்டியில் 53-வது இன்னிங்ஸில் அஸ்வின் 150-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் பிரசன்னா 34 டெஸ்ட் போட்டிகளிலும் அனில் கும்ளே 34 டெஸ்ட் போட்டிகளிலும் ஹர்பஜன் சிங் 35 டெஸ்ட் போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். மற்றொரு இந்திய ஸ்பின்னர் சந்திரசேகர் 36 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட் மைல்க்கல்லை எட்டினார். உலக அளவில் இங்கிலாந்து பவுலர் பார்ன்ஸ் 24 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை சாய்த்து சாதனையை வைத்துள்ளார்.
2-வது இடத்தில் வக்கார் யூனிஸ் 27 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட் மைல்கல்லை எட்டினார்.
தென் ஆப்பிரிக்க பவுலர் டேய்பீல்ட், இயன் போத்தம், டேல் ஸ்டெய்ன், சயீத் அஜ்மல் ஆகியோருடன் தற்போது அஸ்வின் 29 டெஸ்ட் போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
மேலும் 13-வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின். 3 முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார். 4-வது முறை 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் வாய்ப்பை மொஹாலி பிட்ச் அவருக்கு வழங்கியுள்ளது. நிறைவேற்றுவாரா அஸ்வின் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT