Published : 09 Feb 2021 02:45 PM
Last Updated : 09 Feb 2021 02:45 PM
குறைகளையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்விக்காக எந்தக் காரணத்தையும் கூற விரும்பவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை டெஸ்ட் தொடரின் 5-வது நாளில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. புஜாரா 15 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய கில் 50 ரன்களைக் கடந்து ஆட்டமிழந்தார்.
அணியின் துணை கேப்டன் ரஹானேவும் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழக்க, அடுத்து இணைந்த ஜோடிகளில் விராட் கோலி மற்றும் பண்ட் இணை மட்டுமே ரன்களைச் சேர்த்தனர்.
இதன் பின்னர் உணவு இடைவேளியின்போது இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின் விராட் கோலி அரை சதம் எட்டினார். 46 பந்துகளில் 9 ரன்களை எடுத்திருந்த அஸ்வின் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 72 ரன்கள் எடுத்திருந்த கோலி பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்டெம்ப்பைப் பறிகொடுத்தார். இதனால் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது.
அடுத்த சில ஓவர்களில் ஷபாஸ் நதீம் (0), பும்ரா (4) ஆட்டமிழக்க 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கண்டது. அந்த அணியின் ஜாக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தோல்வி குறித்து இந்திய கேப்டன் கோலி பேசும்போது, “முதல் இரண்டு நாள் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருந்தது. நாங்கள் போதிய அழுத்தத்தை இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸில் அளிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்குப் போதிய அழுத்தத்தைக் கொடுத்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே பந்து வீசினர். எனினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது.
ஆட்டத்தின் குறைகளையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்விக்காக எந்தக் காரணத்தையும் கூற விரும்பவில்லை. அடுத்து வரும் மூன்று போட்டிகளில் கடும் நெருக்கடியைக் கொடுப்போம்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT