Published : 09 Feb 2021 02:03 PM
Last Updated : 09 Feb 2021 02:03 PM
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
9 விக்கெட்டுகள் மீதமிருக்க 381 ரன்கள் தேவை என்கிற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. களத்தின் தன்மை பேட்டிங்குக்கு சாதகமாக இல்லை என்பதால் வெற்றி பெறுவது மிகக் கடினம் என்கிற நிலையில் இந்தியா ஆட்டத்தை ட்ரா செய்யவே விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
12 ரன்கள் எடுத்து களத்தில் இருந்த புஜாரா மேற்கொண்டு வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரை சதம் அடித்த கில் நம்பிக்கை தர ஆரம்பித்த நேரத்தில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் புதிய பேட்ஸ்மேன் ரஹானேவும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது. ரிஷப் பந்த் 11 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமலும் வீழ்ந்தனர். இதன் பின் ஒரு பக்கம் கோலி ரன் சேர்க்க மறுமுனையில் அஷ்வின் தன்னால் முடிந்த வரை பந்துவீச்சை எதிர்கொண்டு ட்ராவை நோக்கி ஆட்டத்தை எடுத்துச் செல்ல முயற்சித்தார்.
உணவு இடைவேளியின் போது இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின் விராட் கோலி அரை சதம் எட்டினார். 46 பந்துகளில் 9 ரன்களை எடுத்திருந்த அஷ்வின் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 72 ரன்கள் எடுத்திருந்த கோலி பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்டம்பைப் பறிகொடுத்தார். இதனால் இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது.
அடுத்த சில ஓவர்களில் ஷபாஸ் நதீம் (0), பும்ரா (4) ஆட்டமிழக்க 227 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி கண்டது. அந்த அணியின் ஜாக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடைசியாக இந்தியா 1999 ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி கண்டது. அதன் பிறகு இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இங்கிலாந்து அணி ஆசிய கண்டத்தில் பதிவு செய்திருக்கும் ஆறாவது தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT