Published : 08 Feb 2021 02:58 PM
Last Updated : 08 Feb 2021 02:58 PM
114 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் புதிய வரலாற்றைப் படைத்துள்ளார். இசாந்த் சர்மாவும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் சேர்த்திருந்தது. இங்கிலாந்து அணியின் 578 ரன்களைவிட இன்னும் 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருந்தது.
சென்னைவாசிகளான வாஷிங்டன் சந்தர் 33 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் களத்தில் இருந்து இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். நிதானமாக ஆடிய சுந்தர் 82 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். துணையாக ஆடிய அஸ்வின் 31 ரன்னில் லீச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட் கொடுத்து வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு இருவரும் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அதன்பின் வந்த ஷான்பாஸ் நதீம்(0) லீச் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இசாந்த் சர்மா(4), பும்ரா0) இருவரும் ஆன்டர்ஸனிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 85 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 95.5 ஓவர்களில் 337 ரன்களுக்கு இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
241 ரன்கள் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ரோரி பர்ன்ஸ், சிப்ளி களமிறங்கினர். 2-வது இன்னிங்ஸின் முதல் ஓவரை அஸ்வின் வீசினார்.
அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, உலகக் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றைப் படைத்தார். அதாவது, கடந்த 114 ஆண்டுகளாக 2-வது இன்னிங்ஸ் தொடக்கத்தில் முதல் ஓவர் முதல் பந்தில் எந்த சுழற்பந்துவீச்சாளரும் விக்கெட் வீழ்த்தியதில்லை.
இந்த சாதனையை 14 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வின் நிகழ்த்தி புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். கடைசியாக கடந்த 1907-்ம ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் பெர்ட் வோக்லர் 2-வது இன்னிங்ஸில் முதல் ஓவரில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி உணவு இடைவேளையின் போது 6விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் சேர்த்துள்ளது. ஆட்டத்தின் 15-வது ஓவரை இசாந்த் சர்மா வீசினார். இசாந்த் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி லாரன்ஸ் 18 ரன்னில் வெளியேறினார்.
இந்த விக்கெட்டை வீழ்த்தியபோது, இசாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டிய 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக 6-வது இந்திய வீரர் எனும் சிறப்பைப் பெற்றார்.
அதுமட்டுமல்லால் மிகவும் மெதுவாக இந்த சாதனையை இசாந்த் செய்துள்ளார். 98 போட்டிகளில் இசாந்த் சர்மா 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார். ஆனால், கும்ப்ளே 66 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 72 போட்டிகளிலும், கபில்தேவ் 83 போட்டிகளிலும் 300 விக்கெட்டுகளை எட்டியனர். ஜாஹிர் கான் 89 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எட்டினார்.
ஆனால், இசாந்த் சர்மா 98 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை தொட்டுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய இசாந்த் சர்மா 14 ஆண்டுகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT