Published : 05 Feb 2021 12:57 PM
Last Updated : 05 Feb 2021 12:57 PM
அஸ்வினின் சுழற்பந்துவீச்சு மற்றும் பும்ராவின் வேகப்பந்துவீச்சால் சென்னையில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி உணவு இடைவேளைக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 போட்டித் தொடரில் விளையாட உள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன.
முதல் டெஸ்ட் இன்று சென்னையில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
சேப்பாக்கம் ஆடுகளம் தட்டையாக, கடினமாக இருந்ததால் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா, இசாந்த் சர்மா சற்று திணறினர். இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ரோரி பர்ன்ஸ், சிப்ளி இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அஸ்வின், ஷான்பாஸ் நதீம், பும்ரா, இசாந்த் சர்மா என 4 பேர் பந்து வீசியும் சிப்ளி, பர்ன்ஸ் நிதானமாக பேட் செய்தனர்.
20 ஓவர்கள் வரை விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களுக்கு மேல் சென்றது.
அஸ்வின் வீசிய 24-வது ஓவரில் ரோரி பர்ன்ஸ் பந்தை ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால், பந்து வருவதற்கு முன்பாக, பேட்டை வேகமாகச் சுழற்றியதால், பேட்டில் எட்ஜ் எடுத்து, கீப்பர் ரிஷப் பந்த்திடம் சென்றது. ரோரி பர்ன்ஸ் 33 ரன்களில் வெளியேறினார். அடுத்துவந்த லாரன்ஸ் ரன் ஏதும் சேர்க்காமல் பும்ரா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
63 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் 2-வது விக்கெட்டையும் இழந்தது.
சிப்ளி 29 ரன்களிலும், கேப்டன் ரூட் 11 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 34 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT