Published : 03 Feb 2021 05:06 PM
Last Updated : 03 Feb 2021 05:06 PM

பும்ரா பந்துவீச்சை சந்திக்கும்போது ப்ளே ஸ்டேஷனில் விளையாடுவது போன்று இருந்தது: ஆஸி. வீரர் புகோவ்ஸ்கி வியப்பு

இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா: கோப்புப் படம்.

சிட்னி

சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை சந்திக்கும்போது, ஏதோ ப்ளே ஸ்டேஷன் விளையாட்டில் விளையாடுவது போன்று நான் உணர்ந்தேன் என்று ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று நாடு திரும்பியது. இதில் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய புகோவ்ஸ்கி அரை சதம் அடித்து 62 ரன்களில் ஷைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்ஸில் 10 ரன்களுடன் வெளியேறினார். அதன்பின் தோள்பட்டை காயம் காரணமாக, பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் புகோவ்ஸ்கி இடம் பெறவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள தி கிரேட் கிரிக்கெட்டர் எனும் யூடியூப் சேனலுக்கு புகோவ்ஸ்கி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''சிட்னி டெஸ்ட் போட்டியில் நான் அறிமுகமாகி, வார்னருக்கு பதிலாக முதல் பந்தை நான்தான் சந்தித்தேன். இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை நான் சந்தித்தபோது, ஏதோ ப்ளே ஸ்டேஷனில் இன்டர்நேஷனல் கிரிக்கெட்டர் 2011 எனும் கேம் விளையாடுவதைப் போல் உணர்ந்தேன். பும்ராவின் பந்துவீச்சு மின்னல் வேகத்தில் இருந்தது.

ப்ளே ஸ்டேஷனில் விளையாடும்போது, எவ்வாறு பந்துவீச்சை அடிக்க வேண்டும் என்று முயல்வோமோ அதுபோன்று பும்ரா பந்துவீச்சையும் அடிக்க முயன்றேன். பும்ரா பந்துவீச்சை மிகவும் விரும்பி பேட் செய்தேன்.

ப்ளே ஸ்டேஷனில் நான் விளையாடும்போது தோல்வி அடைந்துவிட்டால், அன்று எனக்குப் போலியாக உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிடுவேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.

நான் ஷேன் வாட்ஸன் ரசிகன். ஷேன் வாட்ஸன் எப்போதெல்லாம் தொடக்க வீரராகக் களமிறங்குகிறாரோ அப்போது ஆஷஸ் தொடரைப் பார்ப்பேன். ப்ளே ஸ்டேஷனில் விளையாடும்போது, ஷேன் வாட்ஸனாக உருவகம் செய்துகொண்டு எப்படியாவது சதம் அடிக்க வைக்க முயல்வேன். இதற்காகப் பல நேரங்களில் பள்ளிக்குச் செல்லாமல் இருந்திருக்கிறேன்''.

இவ்வாறு புகோவ்ஸ்கி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x