Published : 02 Feb 2021 05:37 PM
Last Updated : 02 Feb 2021 05:37 PM
தென் ஆப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டு அணியுடன் நடக்க இருந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரத்து செய்ததாக இன்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து, தொடரிலிருந்து ஏறக்குறைய ஆஸ்திரேலியா வெளியேறிவிட்டது. இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
இதில் நியூஸிலாந்துக்கு அடுத்த ஜூன் மாதம் வரை எந்த டெஸ்ட் போட்டியும் இல்லை என்பதால், தற்போதுள்ள புள்ளியில்தான் (70 சதவீதம்) நீடிக்க வேண்டியது இருக்கும்.
ஆனால், 430 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும், 412 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் யார் ஃபைனலுக்கு முன்னேறுவார்கள் என்பதற்கான முக்கியத் தொடராக மாறும்.
தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சென்று விளையாடுவது வீரர்களின் உடல்நலனுக்குப் பாதுகாப்பில்லை என்பதால், டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் அங்கு ஆஸி. வீரர்கள் பயணம் செய்வது சாத்தியமில்லை.
அவ்வாறு ஆஸி. வீரர்கள், குழுவினர் தென் ஆப்பிரிக்காவுக்குப் பயணிப்பது அவர்கள் உடல்நலத்துக்குப் பாதுகாப்பில்லாதது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆதலால், தென் ஆப்பிரிக்காவுடன் நடக்கும் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தாலோ, அல்லது இந்தியா தொடரை வென்றாலோ, தென் ஆப்பிரிக்கத் தொடரை ஆஸி. வெல்லும் பட்சத்தில் அல்லது டிரா செய்யும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இருந்தது. ஆனால், தென் ஆப்பிரிக்கத் தொடர் ரத்தானதால், அந்த வாய்ப்பு ஆஸி.க்குப் பறிபோனது.
கரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு வங்க தேசத்துக்குச் செல்லும் பயணத்தையும் ஆஸ்திரேலியா ரத்து செய்தது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவுடான அடுத்த தொடருக்கான தேதியும் அறிவிக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT