Published : 06 Jun 2014 09:25 PM
Last Updated : 06 Jun 2014 09:25 PM
இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்யும் திறமை கொண்ட பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லை என்று கூறியுள்ளார் வெங்சர்க்கார்.
தனது சொந்த கிரிக்கெட் அகாடமிக்காக இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்யும் விழாவில் வெங்சர்க்கார் இவ்வாறு கூறியுள்ளார்.
"இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை 2 இன்னின்ங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்தால்தான் வெற்றி பெற முடியும், 4 பந்து வீச்சாளர்களைத்தான் நாம் தேர்வு செய்வோம், இதில் 2 பவுலர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவது அவசியம், இந்த அணியில் அத்தகைய திறமையுடைய பவுலர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கடினமாக இருக்கும், ஏனெனில் பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகள் பற்றி நமக்கு ஒன்றும் புரியாது, இந்திய அணி நல்ல தயாரிப்புடன் செல்லவேண்டும்.
மேலும் 2 பயிற்சி ஆட்டங்கள் மிகக் குறைவு, முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் முன்னர் குறைந்தது 4 அல்லது 5 பயிற்சி ஆட்டங்களாவது வேண்டும்.
கோடையின் ஆரம்பக் கட்டத்தில் இந்தியா அங்கு செல்கிறது. அப்போது பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகும். இளம் வீரர்கள் அந்தச் சூழலுக்குத் தக்கவாறு விரைவில் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவேண்டும். ஆஸ்திரேலியா பிட்ச்களில் பந்துகள் எழும்பும் என்பதற்கு வீரர்கள் தயாராக இருக்க வேண்டும், இங்கிலாந்தில் பந்துகள் ஸ்விங் ஆகும்.
முன்பு நாங்கள் இங்கிலாந்து செல்லும் போது முதல் டெஸ்ட் போட்டிக்கு ஒரு மாதம் முன்பாக சென்று விடுவோம். அது உதவிகரமாக அமைந்தது"
இவ்வாறு இந்திய அணியின் இங்கிலாந்து தொடரை அவர் அவதானித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT