Published : 30 Jan 2021 01:57 PM
Last Updated : 30 Jan 2021 01:57 PM
இந்திய கிரிக்கெட்டில் 87 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதேசமயம், பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்களின் விருப்பப்படி விஜய் ஹசாரே கோப்பை மட்டும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான வினு மன்கட் கோப்பைக்கான ஒருநாள் தொடர், மகளிரில் சீனியர் பிரிவுக்கான ஒருநாள் தொடர் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''இந்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பையுடன், 19 வயதுக்குட்பட்ட வினு மன்கட் கோப்பைப் போட்டியும், மகளிர் சீனியருக்கான ஒருநாள் போட்டியும் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும். ஆனால், ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என அனைத்து கிரிக்கெட் சங்கங்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஞ்சிக் கோப்பைக்கான காலண்டரைத் தயார் செய்வது கடினமாக இருக்கிறது. ஏற்கெனவே நாம் ஏராளமான நாட்களை இழந்துவிட்டோம். இனிமேல் உள்ளூர் போட்டிக்கான காலண்டரைத் தயார் செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக விளையாடுவது அவசியம். ஆனால், அது கடினமான செயல்.
ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் விளையாடாமல் ஊதியத்தை இழந்த வீரர்களுக்கு உரிய இழப்பீடு தரப்படும் என பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சயத் முஷ்டாக் அலி கோப்பையை வெற்றிகரமாக நடத்திய அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். முஷ்டாக் அலி கோப்பைக்கு என்ன மாதிரியான பயோ-பபுள் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதோ அதே விதிமுறைகள் அடுத்த மாதம் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கும் கடைப்பிடிக்கப்படும்.
பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முழுவீச்சில் வேகமாகத் தயாராகி வருகிறோம்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT