Published : 27 Jan 2021 10:55 AM
Last Updated : 27 Jan 2021 10:55 AM
சிட்னியில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர்கள் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா இருவரும் ரசிகர்களால் இனவெறிப் பேச்சுக்கு ஆளானது உண்மைதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது, எல்லைக் கோட்டில் நின்றிருந்த முகமது சிராஜையும், ஜஸ்பிரித் பும்ராவையும் மைதானத்தில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்த ரசிகர்கள் சிலர் இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளையும், அவமதிப்புக்குரிய வார்த்தைகளையும் கூறித் திட்டினர்.
இது தொடர்பாக போட்டி நடுவர் டேவிட் பூனிடம் இந்திய அணி நிர்வாகமும், கேப்டன் ரஹானே, பும்ரா, சிராஜ் ஆகியோர் புகார் அளித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆட்டம் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.
பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த அந்தக் குறிப்பிட்ட 6 ரசிகர்கள் போட்டியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர். இந்தப் பிரச்சினைகளையும் கடந்து இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி நாடு திரும்பியது.
இந்திய அணி வீரர்கள் இனவெறிப் பேச்சுக்கு ஆளானதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிபந்தனையற்ற மன்னிப்பை பிசிசிஐ அமைப்பிடமும், இந்திய அணியிடமும் கோரியது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இதன்படி நியூ சவுத்வேல்ஸ் போலீஸாரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தினர்.
இந்திய வீரர்கள் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு மற்றும் நேர்மைக்குழுவின் தலைவர் சீன் காரோல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சிட்னி டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் இனவெறிப் பேச்சுக்கு ரசிகர்களால் ஆளானது உண்மைதான்.
ரசிகர்கள் நடந்து கொண்டவிதம் குறித்து ஐசிசியிடம் ஆஸி. கிரிக்கெட் வாரியம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எங்களின் விசாரணை கண்காணிப்பு கேமரா, டிக்கெட் புள்ளிவிவரங்கள், போட்டியைக் காண வந்திருந்த மற்ற ரசிகர்களிடம் விசாரணை ஆகியவற்றின் உதவியால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இனவெறிப் பேச்சைப் பேசிய ரசிகர்களைத் தேடி வருகிறோம். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு நீண்டகாலத்துக்குப் போட்டியைக் காண தடை விதிக்கப்படும். இது தொடர்பாக சம்பவம் நடந்த அன்றே ஆஸி. கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி நிர்வாகத்திடம் மன்னிப்பு கோரப்பட்டது.
நியூசவுத்வேல்ஸ் போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் விசாரணை முடியும்வரை மற்ற விவரங்கள் ஏதும் தெரிவிக்க இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனரீதியான பேச்சு குறித்து இந்திய அணி வீரர் முகமது சிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஆஸ்திரேலியாவில் பல அவமானங்களைச் சந்தித்தேன். இனரீதியாக ரசிகர்கள் திட்டியது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. எனக்கு நீதி கிடைக்குமா அல்லது கிடைக்காதா எனத் தெரியவில்லை. கேப்டனிடம் நடந்த சம்பவங்கள் பற்றித் தெரிவித்தேன்.
ரசிகர்கள் என்னை அவமானப்படுத்தியபோது, அது தொடர்பாக நான் கள நடுவர்களிடம் புகார் தெரிவித்தேன். நடுவர்கள் எங்களைப் போட்டியிலிருந்து பாதியிலேயே செல்வதற்கு அனுமதியளித்தனர். ஆனால், ரஹானே நாம் போகக்கூடாது. நாம் எந்தத் தவறும் செய்யவில்லை.
நாம் விளையாடுவோம் என்றார். இதனால் சில நிமிடங்கள் மட்டும் போட்டி நிறுத்தப்பட்டது.
ஆனால், ரசிகர்கள் என்னை இனரீதியாகத் திட்டியபின்புதான் நான் மனரீதியாக வலிமையானேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT