Published : 06 Nov 2015 07:03 PM
Last Updated : 06 Nov 2015 07:03 PM
மொஹாலி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆட்ட முடிவில் இந்திய அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக அஸ்வின், ஜடேஜா, மிஸ்ராவின் சுழலில் சிக்கி தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 184 ரன்களுக்குச் சுருண்டு 17 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி. இந்நிலையில் மேலும் இன்று 40 ஓவர்களை ஆட வேண்டி வந்த இந்திய அணி புஜாரா (63 நாட் அவுட்), விஜய் (47) ஆகியோரது திறமையான ஆட்டத்தினால் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. ஆட்ட முடிவில் புஜாரா 63 ரன்களுடனும் விராட் கோலி 11 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் நாளைய 3-வது தினத்தில் இந்தியா 142 ரன்கள் முன்னிலையுடன் 8 விக்கெட்டுகளைக் கையில் கொண்டு களமிறங்கவுள்ளது.
இன்றைய தினத்தின் கடைசி பந்துக்கு முதல் பந்தை இம்ரான் தாஹிர் ஷார்ட் பிட்சாக வீச புஜாரா அதனை மிட்விக்கெட்டில் சிக்சர் அடித்தார் என்றால் இந்திய அணியினர் எந்த மனநிலையுடன் அடி வருகின்றனர் என்பது புரியவருகிறது.
இதே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தன் அறிமுக போட்டியில் 187 ரன்களை அதிரடி முறையில் குவித்து சாதனை படைத்த ஷிகர் தவணின் டெஸ்ட் வாழ்க்கை இந்த மைதானத்திலேயே இப்போதைக்கு முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காரணம் 2 இன்னிங்ஸ்களிலும் அவர் பூஜ்ஜியம். இம்முறையும் வெர்னன் பிலாண்டரின் ஒரு சாதாரண வெளியே செல்லும் பந்தை தேவையில்லாமல் அதற்கான எந்தவித சரியான உத்தியும் இல்லாமல் தவண் ஆட டிவில்லியர்ஸ் கேட்ச் பிடித்தார். இதன் மூலம் தொடர்ச்சியாக 6 வது முறையாக தொடக்க ஜோடி ரன்சேர்ப்பு ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை என்பது கவனிக்கத் தக்கது. லோகேஷ் ராகுல் நிச்சயம் தனது வாய்ப்புக்காக உதட்டை ஈரப்படுத்திக் கொண்டிருப்பார்.
அதன் பிறகு விஜய், புஜாரா ஜோடி தடுப்பாட்டத்தின் போது மட்டையை உடலை விட்டு விலகிச் செல்லாதவாறு அருமையாக ஆடினர். ரன் எடுக்க வாய்ப்பளிக்கும் பந்துகளில் ரன்கள் எடுக்கப்பட்டன. விஜய் 105 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். புஜாரா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 100 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார்.
முரளி விஜய்க்கு இம்ரான் தாஹிர் வீசிய பந்து 3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எதை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக அமைந்தது. அதாவது, பந்தை சற்றே மெதுவாக பிளைட் செய்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்தார், அது கூக்ளி, பந்து உள்ளே திரும்பியது, எழும்பியது மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் தெம்பா பவுமாவிடம் கேட்ச் ஆனது.
ஹஷிம் ஆம்லாவின் சில கேப்டன்சி உத்திகளும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இல்லை. பிலாண்டர் தொடர்ந்து புஜாரா, விஜய் ஆகியோருக்கு சற்றே சிரமம் அளித்த நிலையில் தேநீர் இடைவேளைக்குப் பிறகு பந்து புதிதாக இருக்கும் போது கொண்டு வரப்படவில்லை. மேலும் ரபாதா 3 ஓவர்கள் மெய்டன் வீசிய பிறகு கட் செய்யப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் குறிப்பாக நீண்ட நேரம் ஒருவரை வீச வைப்பதன் மூலமே பேட்ஸ்மெனுக்கு நெருக்கடி ஏற்படுத்த முடியும்.
டேல் ஸ்டெய்ன் பந்து வீச முடியாமல் போனதும் ஆம்லாவின் எச்சரிக்கைக்கு காரணமாக இருக்கலாம். எனினும் தென் ஆப்பிரிக்கா தனது பலத்துக்கு ஏற்ப ஆடுவதே சிறந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT