Published : 23 Jan 2021 02:58 PM
Last Updated : 23 Jan 2021 02:58 PM
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் நானும், விஹாரியும் என்ன செய்யப் போகிறோம் எனத் தெரியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் பயன்படுத்திய நுட்பங்கள் வித்தியாசமாக இருந்தன என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் கலகலப்பாகத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் அபாரமாக வென்று தாயகம் திரும்பியது. அதிலும் ஆஸ்திரேலிய அணியைத் தொடர்ந்து 2-வது முறையாக அவர்கள் மண்ணில் வைத்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
அதிலும் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் காபா மைதானத்தில் 32 ஆண்டுகளாகத் தோல்வியைச் சந்தித்திராத ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட்டில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்தது. இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை பிரமிப்படைய வைத்துள்ளது.
குறிப்பாக சிட்னி டெஸ்ட்டில் போட்டியை வெல்லும் முயற்சியில் 4-வது இன்னிங்ஸில் 5-வது மற்றும் கடைசி நாளில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் பாடிலைன் பந்துவீச்சைக் கையாண்டு இந்திய வீரர்களை மிரட்டினர்.
ஆனால் ஹனுமா விஹாரி - அஸ்வின் கூட்டணி, எப்படி வேண்டுமானாலும் பந்துவீசுங்கள் அசைக்க முடியாது என்ற ரீதியில் கடைசிவரை களத்தில் நின்று போட்டியை டிரா செய்து அணியை தோல்வியிலிருந்து காத்தன.
258 பந்துகளை இருவரும் களத்தில் இருந்து சந்தித்து, ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் அசுரத்தனமான தாக்குதல் பந்துவீச்சில் உடலில் பல அடிகளை வாங்கி அஸ்வினும், விஹாரியும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிட்னி டெஸ்ட்டில் விஹாரியுடன் பேட் செய்த அனுபவங்கள் குறித்து இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதருடன், ரவிச்சந்திர அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கலகலப்பாகப் பேசியுள்ளார்.
அதில் அஸ்வின் கூறியிருப்பதாவது:
''நானும், விஹாரியும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யாமல் தொடர்ந்து பேட் செய்து வருவதைப் பார்த்து ஆஸ்திரேலிய வீரர்கள் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் இருந்தார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், நானும், விஹாரியும் காயத்தால் அவதிப்பட்டோம். ஒருவரால் முன்னே சென்று விளையாட முடியாது. மற்றொருவருக்கு உடலில் அடிபட்டுள்ளது. அதனால் ஸ்ட்ரைக்கை மாற்றாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
என்ன நடந்தது என்றால், என்னுடைய முதுகுப் பகுதி கடுமையாக வலித்தது. என்னால் நகரக்கூட முடியவில்லை. என் மீது பவுன்ஸர்களை ஆஸி. பந்துவீச்சாளர்கள் வீசியிருந்தால், அது கண்டிப்பாக பேட்டில் எட்ஜ் எடுத்திருக்கும், விக்கெட்டை இழந்திருப்பேன். ஆனால், ஏதும் செய்யாமல் தவறு செய்துவிட்டார்கள்.
ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், தாக்குதல் பந்துவீச்சைக் கையாள்வோம், உடலில் அடி கொடுப்போம், அதற்கு பயந்து விக்கெட்டை இழந்துவிடுவார்கள் என நினைத்தார்கள். ஆனால், எனக்கும் விஹாரிக்கும் உடம்பில் பந்தில் அடி விழும்போது, நாங்கள் இன்னும் துணிச்சலாக பந்துவீச்சை எதிர்த்து நின்றோம்.
அதுமட்டுமல்லாமல், கேப்டன் டிம் பெய்னும் என்னைக் கிண்டல் செய்து வெறுப்பேற்றி வந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியினர் எங்களை ஆட்டமிழக்க வைக்க முடியாமல் கடைசிக் கட்ட உத்தியைக் கையாள்கிறார்கள் என்று நானும் விஹாரியும் பேசிக்கொண்டோம். அதனால், உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்று விட்டுவிட்டோம்''.
இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.
சிட்னி டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வினிடம் ஆஸி.கேப்டன் டிம்பெய்ன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு, ஸ்டெம்ப் மைக்கில் பதிவானது. அதில், “காபா டெஸ்ட் போட்டிவரைக்கும் காத்திருக்க முடியாது அஸ்வின்” என்று பெய்ன் கூறினார்.
அதற்கு உடனடியாகப் பதில் அளித்த அஸ்வின், “இந்தியாவுக்கு நீங்கள் வரும்வரை காத்திருக்க முடியாது. இந்தியா வந்தால் அதுதான் உங்களுக்கு கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்” எனப் பதிலடி கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT