Published : 23 Jan 2021 08:05 AM
Last Updated : 23 Jan 2021 08:05 AM
2021-ம் ஆண்டில் நடக்கும் 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிக்கான சிறிய அளவிலான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 18 அல்லது 19-ம் தேதியில் சென்னையில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
13-வது ஐபிஎல் போட்டி கரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிக்கான ஏலம் கொல்கத்தாவில் நடந்தது. 14-வது ஐபிஎல் டி20 போட்டியை உள்நாட்டில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி விரும்புகிறார்.
14-வது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்துக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை பிசிசிஐ அமைப்பிடம் அளித்துள்ளன.
இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் சிறிய அளவிலான வீரர்கள் ஏலம் நடக்கும். ஏனென்றால், 2022-ம் ஆண்டில் கூடுதலாக 2 புதிய அணிகள் இணைவதால், ஒட்டுமொத்தமாக அணிகள் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஏலம் அடுத்த ஆண்டில்தான் நடக்கும்.
ஆதலால், சிறிய அளவிலான ஏலம் இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “சென்னையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17-ம் தேதி முடிகிறது. அது முடிந்தபின் 18-ம் தேதி அல்லது 19-ம் தேதி இரு தேதிகளில் ஒருநாள் மினி ஏலம் நடக்கலாம். தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எங்கு நடத்துவது என்றும் முடிவு செய்யப்படவில்லை. அதுகுறித்து ஆலோசிப்பதும் அவசியம். இந்தியாவில் நடத்துவதைத்தான் அனைவரும் விரும்புகிறார்கள். அது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை வெளிநாட்டில் நடத்த வேண்டிய சூழல், நிர்பந்தம் ஏற்பட்டால் ஐக்கிய அரபு அமீரகம்தான் இந்தியாவின் வாய்ப்பாக இருக்கும்.
முஸ்தாக் அலிக் கோப்பை நடந்து முடிந்தபின்புதான், ஐபிஎல் போட்டியை உள்நாட்டில் நடத்துவதற்கான சூழல் குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியும். மத்திய அரசு அனுமதி அளித்தால், நிச்சயம் உள்நாட்டில்தான் போட்டி நடத்தப்படும். இல்லாவிட்டால், ஐக்கிய அரபு அமீரகம்தான் போட்டி நடத்த சிறந்த இடமாக அமையும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT