Published : 22 Jan 2021 05:12 PM
Last Updated : 22 Jan 2021 05:12 PM
சிட்னி டெஸ்ட்டில் ரசிகர்கள் என்னை அவமானப்படுத்தியபோது, மைதானத்திலிருந்து பாதியிலேயே நான் செல்வதற்கு எனக்கு நடுவர்கள் வாய்ப்பளித்தார்கள். ஆனால், ரசிகர்களின் வார்த்தைகள் என் மனவலிமையை அதிகரித்தது என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குத் தேர்வான முகமது சிராஜ், ஆஸ்திரேலியப் பயணத்தில் இருந்தபோது அவரின் தந்தை ஹைதராபாத்தில் காலமானார். ஆனால், ஆஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பி மீண்டும் வரும்போது 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் முகமது சிராஜ் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டார்.
இந்திய அணியில் முகமது ஷமி காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக சிராஜ் சேர்க்கப்பட்டார். சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, எல்லைக் கோட்டில் நின்றிருந்த முகமது சிராஜையும், ஜஸ்பிரித் பும்ராவையும் மைதானத்தில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்த ரசிகர்கள் சிலர் அவமதிப்புக்குரிய வார்த்தைகளைக் கூறியும் இனவெறி வார்த்தைகளைக் கூறியும் சிராஜையும், பும்ராவையும் திட்டினர்.
இது தொடர்பாக போட்டி நடுவர் டேவிட் பூனியத்திடம் இந்திய அணி நிர்வாகமும், கேப்டன் ரஹானேவும் புகார் அளித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட ரசிகர்கள் போட்டியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர்.
இந்திய வாரியத்திடம் ஆஸ்திரேலிய வாரியம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அனைத்து அவமானங்களுக்கும் இந்திய அணி பதிலடி கொடுத்தது. அதிலும் பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாமல் உலக அணிகள் திணறிய நிலையில், இந்திய அணி தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது.
அதிலும் இந்திய அணியில் முகமது சிராஜ், கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒட்டுமொத்தமாக 13 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்திய அணியில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை சிராஜ் பெற்றார்.
ஆஸ்திரேலியப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து நேற்று இந்திய வீரர்கள் தாயகம் திரும்பினர்.
ஆஸ்திரேலியப் பயணத்தின்போது, சிராஜின் தந்தை முகமது கவுஸ் காலமானார். தந்தையின் இறுதிச்சடங்கிற்குக் கூட சிராஜ் செல்லாத நிலையில், ஹைதராபாத் வந்திறங்கியுடன் சிராஜ் நேராக தந்தையின் நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி வணங்கினார்.
அதன்பின் சிராஜ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஆஸ்திரேலியாவில் பல அவமானங்களைச் சந்தித்தேன். இனரீதியாக ரசிகர்கள் திட்டியது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. எனக்கு நீதி கிடைக்குமா அல்லது கிடைக்காதா எனத் தெரியவில்லை. கேப்டனிடம் நடந்த சம்பவங்கள் பற்றி தெரிவித்தேன்.
ரசிகர்கள் என்னை அவமானப்படுத்தியபோது, அது தொடர்பாக நான் கள நடுவர்களிடம் புகார் தெரிவித்தேன். நடுவர்கள் எங்களைப் போட்டியிலிருந்து பாதியிலேயே செல்வதற்கு அனுமதியளித்தனர். ஆனால், ரஹானே நாம் போகக்கூடாது . நாம் எந்தத் தவறும் செய்யவில்லை. நாம் விளையாடுவோம் என்றார். இதனால் சில நிமிடங்கள் மட்டும் போட்டி நிறுத்தப்பட்டது.
ஆனால், ரசிகர்கள் என்னை இனரீதியாகத் திட்டியபின்புதான் நான் மனரீதியாக வலிமையானேன். என் விளையாட்டை எந்தவிதத்திலும் அவர்களின் வார்த்தை பாதிக்காதவாறு பார்த்துக்கொண்டேன். என் பந்துவீச்சில் இன்னும் வேகத்தையும் துல்லியத்தையும அந்த வார்த்தைகள்தான் சேர்த்தன.
இந்திய அணிக்காக நான் விளையாட வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. வெள்ளை ஆடையிலும், நீலநிற ஆடையிலும் நான் இருக்க வேண்டும் என என் தந்தை விரும்பினார். என் தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்''.
இவ்வாறு சிராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT