Published : 21 Jan 2021 07:13 PM
Last Updated : 21 Jan 2021 07:13 PM
2000-01 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கும், 2020-21ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடருக்கும் இடையே சுவாஸ்ரயமான ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன.
விராட் கோலி தலைமையில் இந்த முறை ஆஸ்திரேலியத் தொடருக்குச் சென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை வென்றது. டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டத்திலேயே 36 ரன்களுக்கு சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று பெரும் அவமானத்தைச் சந்தித்தது.
ஆனால், அதன்பின் முக்கிய வீரர்கள் கோலி, பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், அஸ்வின், ஜடேஜா, விஹாரி, கே.எல்.ராகுல் ஆகியோர் காயத்தால் விளையாடாத நிலையில், இளம் வீரர்களைக் கொண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதிலும் பிரிஸ்பேனில் 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணி தோல்வியே சந்தித்திராத நிலையில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்துள்ளது.
இதேபோன்றுதான் கடந்த 2000-01்ம் ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் ஏற்பட்டது. ஆனால், அப்போது இந்திய அணியிலும், ஆஸ்திரேலிய அணியிலும் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்தார்கள். இந்திய அணியில் சச்சின், கங்குலி, திராவிட், விவிஎஸ் லட்சுமண், ஹர்பஜன் சிங், ஸ்ரீநாத், அகர்கர் என வலிமையான வீரர்கள் இருந்தார்கள்.
ஆஸ்திரிலேய அணியில் ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ், மேத்யூ ஹேடன், பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், கில்கிறிஸ்ட், மெக்ராத், கில்லஸ்பி, டேமியன் பிளெமிங், ஸ்லாடர், காஸ்ப்ரோவிச் என ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்தார்கள். இருதரப்புக்கும் இடையே நடந்த டெஸ்ட் தொடர் மிகமிக விறுவிறுப்பாக அமைந்திருந்தது.
ஒற்றுமைகள்
தற்போது நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 4 போட்டிகளைக் கொண்டதாக இருந்தது, ஆனால், 2000-01ம் ஆண்டில் இந்தியாவில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தது.
தற்போது முடிந்த டெஸ்ட் தொடரை ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 2001-01ல் கங்குலி தலைமையிலான இந்திய அணியும் டெஸ்ட் தொடரை 2-1 என்றகணக்கில்தான் வென்றது.
அப்போது இந்தியா வென்ற இரு போட்டிகளிலும் இந்திய அணி 2-வது பேட்டிங் செய்துதான் வெற்றி பெற்றது. ரஹானே தலைமையில் இந்திய அணி சமீபத்தில் பெற்ற இரு டெஸ்ட் வெற்றியிலும் 2-வது பேட் செய்துதான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸி. சாதனை தடுத்து நிறுத்தம்
2000-01ம் ஆண்டு இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர் விளையாட ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஆஸி. அணி வந்தபோது, டெஸ்ட் போட்டியில் அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது. தொடர்ந்து 15 போட்டிகளில் வென்று உலக அணிகளை மிரட்டிப் பார்த்தது. இந்தியா வந்து மும்பையி்ல் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வென்று தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றியை ஸ்டீவ் வாஹ் தலைமையிலான அணி பதிவு செய்தது.
ஆனால், கொல்கத்தாவில் விவிஎஸ் லட்சுமண்ஷ்(281), திராவிட்(180) ஆகியோரின் அற்புதமான பேட்டிங், ஹர்பஜன் சிங்கின் 6 விக்கெட் போன்றவற்றால் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சென்னையில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட்டில் வென்றது.
2020-21ம் ஆண்டிலும் முற்றுப்புள்ளி
பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக தோல்வியே சந்திக்காத அணியாக ஆஸ்திரேலியா வலம் வந்தது. ஆனால், பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ரிஷப்பந்த், புஜாரா, கில் ஆகியோரின் பேட்டிங்கால், ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட்டில் இந்திய அணி வென்று ஆஸ்திரேலியாவின் 32 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அறிமுக வீரர்கள் அபாரம்
கடந்த 2001 டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் அறிமுக வீரர் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார், 2021-ம் ஆண்டிலும் பிரிஸ்பேன் வெற்றிக்கு அறிமுக வீரர் காரணமாக அமைந்தார். கடந்த 2001-ம் ஆண்டில் சென்னையில் நடந்த கடைசி டெஸ்ட்போட்டியில் இந்திய அணிக்கு 155 ரன்களை ஆஸி. அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அப்போது இந்திய அணியில் அறிமுக விக்கெட் கீப்பராக களமிறங்கிய சமீர் டீகே கடைசி நேரத்தில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார்.
இந்த முறை ரிஷப்பந்துக்கு துணையாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 22 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். ரன்கள் அடிப்படையில் சமீர் டீகே சேர்த்த 22 ரன்களும், சுந்தர் சேர்த்த 22 ரன்களும்வெற்றிக்கு முக்கியத்துவமாக அமைந்தன. 2001ல் நடந்த சென்னை டெஸ்டில் சாய்ராஜ் பகதுலே எனும் சுழற்பந்துவீச்சாளர் அறிமுகமாகினார், தற்போது வாஷிங்டன் சுந்தர் அறிமுகமாகினார்.
வேற்றுமைகள்
2000-01 பார்டர் கவாஸ்கர் கோப்பை இந்தியாவில் நடந்தது. ஆனால், 2020-21ம் ஆண்டு டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது.
சதங்கள் அதிகம் இல்லை
2001ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா தரப்பில் பல வீரர்கள் சதம் கண்டனர். இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் சென்னையில் அடித்த சதம், கொல்கத்தாவில் விவிஎஸ் லட்சுமண், ராகுல் திராவிட் சதம் முக்கியமானவை.
ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஹேடன் சென்னையில் இரட்டை சதம், கொல்கத்தாவில் ஸ்டீவ் வாஹ் சதம், மும்பையில் ஆடம் கில்கிறிஸ்ட் சதம் அடித்தனர்.
ஆனால், 2021ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தரப்பில் ரஹானே மட்டும் சதம் அடித்தார். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், லாபுஷேன் இருவர் மட்டும் சதம் அடித்தனர்.
தொடர்நாயகன் விருது
2001ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நட்சத்திர வீரராக வலம்வந்தார். அந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியை தனது சுழற்பந்துவீச்சால் கலங்கடித்த ஹர்பஜன் சிங் 32 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தொடர்நாயகன்விருதை கைப்பற்றினார். வெற்றி பெற்றஅணியில் உள்ள வீரருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆனால், 2021-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட்கம்மின்ஸுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
2001ல் அறிமுக வீரர்கள் அதிகம் இல்லை.
2001ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிகமான வீரர்கள் அறிமுகமாகவில்லை. ராகுல் சங்வி, சாய்ராஜ் பகதுலே, சமீர் டீகே ஆகியோர் மட்டுமே அறிமுகமாகினர். ஆனால், 2021ம் ஆண்டில் இந்திய அணியில் பல வீரர்கல் காயத்தால் விளையாடமுடியாததால், நடராஜன், சுந்தர், சிராஜ், கில், ஷைனி ஆகியோர் அறிமுகமாகினர்.
ஹர்பஜனின் சாதனை
2001-ல் நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 50 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த வி்க்கெட்டுகளில் 32 விக்கெட்டுகளை ஹர்பஜன் சிங் மட்டும் வீழ்த்தி இருந்தார். இந்த தொடர் முழுமையாக ஹர்பஜன் சிங் ஆதிக்கமே நிரம்பியது.
2021ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 68 விக்கெட்டுகளை இழந்தது. இதில் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, சுந்தர் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் ஒட்டுமொத்தமாக 23 விக்கெட்டுகள்தான் எடுக்க முடிந்தது. அதாவது 34 சதவீத விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். ஆனால், 2001ல் ஹர்பஜன் சிங் மட்டும் 64 சதவீத விக்கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT