Published : 21 Jan 2021 05:52 PM
Last Updated : 21 Jan 2021 05:52 PM
இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிட்னியில் நடந்த ஆஸிக்கு எதிரான 3-வதுடெஸ்ட் போட்டியின்போது முதல் இன்னிங்ஸில் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய பந்தில்இடதுகை பெருவிரலில் பந்து பட்டு, ஜடேஜாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்தக் காயம் குணமடைய 6 வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், 2-வது இன்னிங்ஸில் ரவிந்திர ஜடேஜாவால் பந்துவீசுவும், பேட்டிங் செய்யவும் முடியவில்லை. மேலும் பிரிஸ்பேன் டெஸ்டில் ஜடேஜாவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.
ரவிந்திர ஜடேஜாவுக்கு ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் மட்டும் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று முதலில் மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முழுவதுமாக ஜடேஜா விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜடேஜாவின் காயம் குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ஜடேஜாவுக்கு கை விரலில் ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தகாயம் குணமடைய 6 வாரங்கள் ஓய்வும், பயிற்சியும் தேவைப்படும்.
ஆதலால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை. ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு ஜடேஜா சேர்க்கப்படுவாரா என்பது 6 வாரங்களுக்குப்பின் அவரின் காயத்தின் தன்மை, குணமடைதல் ஆகியவற்றைப் பொருத்து முடிவு எடுக்கப்படும். ஜடேஜா தனது காயம் குணமடைந்தபின் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சி எடுப்பார்” எனத் தெரிவித்தார்.
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிந்திர ஜடேஜாவுக்கு பதிலாக கூடுதல் சுழற்பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர் எனும் முறையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் நடக்கும் முதல் இரு டெஸ்ட்களிலும் ஜடேஜாவுக்கு பதிலாக விளையாடும் 11 பேரில் சுந்தர் இடம் பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT