Published : 19 Jan 2021 07:41 PM
Last Updated : 19 Jan 2021 07:41 PM
இந்திய வீரர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நாங்கள் 11 வீரர்களுடன்தான் விளையாடியிருக்கிறோம். இந்தியாவில் 150 கோடி மக்கள் இருக்கிறார்கள். இந்தத் தொடரிலிருந்து அதிகம் கற்றுக்கொண்டோம் என்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. கடந்த 32 ஆண்டுகளுக்குப் பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியைச் சாய்த்து வரலாற்றை இந்திய அணி மாற்றி எழுதியுள்ளது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தபின், அடுத்தடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணிக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்து தொடரை வெல்வது சாதரணமாக காரியமல்ல. அதை இந்திய அணி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்திய அணியின் வெற்றி குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''உண்மையில் அற்புதமான டெஸ்ட் தொடராக அமைந்தது. டெஸ்ட் தொடரில் முடிவில் வெற்றியாளர் அல்லது தோற்பவர் யாராவது இருக்க வேண்டும். இன்று டெஸ்ட் கிரிக்கெட்தான் வென்றது.
இந்தத் தோல்வி எங்களை நீண்ட காலத்துக்கு பாதிக்கும். இந்த வெற்றிக்கு முழுமையான உரித்தானவர்கள் இந்திய அணியினர்தான். மிகச் சிறப்பாக இந்திய அணியினர் விளையாடினார்கள். இந்தப் போட்டியிலிருந்து ஏராளமான பாடங்களைக் கற்றுக்கொண்டோம்.
முதலில் எதையும் நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இரண்டாவது, இந்தியர்களை ஒருபோதும், எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. 150 கோடி இந்தியர்கள் இருக்கிறார்கள். நாம் விளையாடியது 11 வீரர்களுடன்தான். இந்த வீரர்கள் எவ்வளவு கடினமான சவால்களை அளிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஆனாலும், முழுமையான வெற்றியை இந்திய அணிக்கு வழங்கிவிட மாட்டேன். ஏனென்றால், முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் சுருட்டி, 3 நாட்களில் வெற்றி பெற்றோம்.
அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய வீரர்கள் துணிச்சலாகப் போராடினார்கள், வெற்றிக்கு உரித்தாகினார்கள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொண்டோம்.
ரிஷப் பந்த்தின் ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. ஹெடிங்கிலியில் பென் ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டத்தை எனக்கு ரிஷப் பந்த் நினைவுப்படுத்தினார். எந்தவிதமான பயமின்றி, ரிஷப் பந்த் சிறப்பாக பேட் செய்தார். நம்பமுடியாத ஆட்டமாக அமைந்தது.
ஷுப்மான் கில்லும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்தப் போட்டி முழுவதும் இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர்கள் ஆஸி. அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை அளித்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றிக்கு முழுமையானவர்கள் இந்தியர்கள் மட்டும்தான்''.
இவ்வாறு லாங்கர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT