Published : 19 Jan 2021 07:12 PM
Last Updated : 19 Jan 2021 07:12 PM
இங்கிலாந்து அணியுடன் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இங்கிலாந்துடன் மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், முதல் இரு போட்டிகளுக்கான அணி வீரர்களை மட்டும் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அணி பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவில் பயணித்து 4 டெஸ்ட் போட்டிகள், ஒரு நாள், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த போட்டிகள் அகமதாபாத்திலும் நடக்கின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்த கேப்டன் கோலி அணிக்குத் திரும்பியுள்ளார். நீண்ட காலத்துக்குப் பின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிக்குத் திரும்பியுள்ளார். பந்து வீசுவதில் சிரமம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார்.
காயம் காரணமாக ஆஸி. தொடருக்குச் செல்லாமல் தவிர்த்த வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா இந்திய அணிக்குள் வந்துள்ளார். சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் அணியில் இடம் பெற்றுள்ளார். அதேசமயம், ஆஸ்திரேலியத் தொடரில் கடைசி டெஸ்ட்டில் அறிமுகமான தமிழக வீரர் நடராஜனுக்கு முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
மாற்று வீரர்களாக பிரியங்கா பஞ்சல், கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர்,கே. கவுதம், சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சத்தேஸ்வர் புஜாரா, விருதிமான் சாஹா, ரிஷ்ப் பந்த், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் (உடல் தகுதி அடிப்படையில்), ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT