Published : 19 Jan 2021 06:51 PM
Last Updated : 19 Jan 2021 06:51 PM
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி, தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் 2-வது முறையாகக் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ரிஷப் பந்த் முக்கியமானவர். 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் ரிஷப் பந்த்தின் பங்கு அளப்பரியது. ரிஷப் பந்த்தின் ஆட்டத்துக்கு இன்று அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ரிஷப் பந்த் புதிய மைல்கல்லை எட்டி, தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது டெஸ்ட் போட்டியில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் வேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் செய்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 32 இன்னிங்ஸில் தோனி ஆயிரம் ரன்களை எட்டினார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 27 இன்னிங்ஸிலேயே ரிஷப் பந்த் ஆயிரம் ரன்களை எட்டி தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தோனிதான் மிகக்குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையைத் தக்கவைத்திருந்தார். அதை ரிஷப் பந்த் தகர்த்துவிட்டார்.
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினீயர் 36 இன்னிங்ஸிலும், விருதிமான் சாஹா 37 இன்னிங்ஸிலும், நயன் மோங்கியா 39 இன்னிங்ஸிலும் ஆயிரம் ரன்களை எட்டினர். சயத் கிர்மானி 45 இன்னிங்ஸிலும், கிரன் மோர் 50 இன்னிங்ஸிலும் ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர்.
உலக அளவில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் 21 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டி முதலிடத்தில் நீடிக்கிறார். அதைத் தொடர்ந்து இலங்கை வீரர் சந்திமால் (22 இன்னிங்ஸ்), இங்கிலாந்தின் ஜான் பேர்ஸ்டோ (22 இன்னிங்ஸ்), குமாரா சங்கக்கரா (23 இன்னிங்ஸ்) டி வில்லியர்ஸ் (23 இன்னிங்ஸ்) ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, ரிஷப் பந்த் மிக விரைவாக 50 டிஸ்மிஸல்களை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT