Published : 19 Jan 2021 03:26 PM
Last Updated : 19 Jan 2021 03:26 PM
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வரலாற்று வெற்றி என் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என்று இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
பிரிஸ்பேன் காபா மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை எந்த அணியும் வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை மாற்றி இந்திய அணி இந்த வெற்றி மூலம் எழுதியுள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட்டில் 36 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வி அடைந்தபின், அதிலிருந்து மீண்டு வந்து, அடுத்தடுத்து வந்த போட்டிகளில் வெற்றி, டிரா, மீண்டும் வெற்றி என இந்திய அணி சாதித்திருப்பது சாதாரணமானது அல்ல.
அதிலும் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்தின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. சிட்னி டெஸ்ட்டிலும், பிரிஸ்பேன் டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாகவே பந்த் இருந்தார். சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்ய பந்தின் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது.
ஆனால் பிரிஸ்பேனில் ரிஷப் பந்த்தின் 89 ரன்கள் ஆட்டத்தின் வெற்றிக்கே வித்திட்டது. பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அதன்பின் ரிஷப் பந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். நான் சரியாக விளையாடாத நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அணி வீரர்கள், குடும்பத்தார், நண்பர்கள், அனைவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் தொடராக இருந்தது.
இந்திய அணி நிர்வாகம் நான் டெஸ்ட் போட்டிக்குள் இடம் பெற்றதும், அணியில் நீ முக்கியமானவர், மேட்ச் வின்னராக இருக்க வேண்டும், உன்னால் போட்டியை வெல்ல வைக்க முடியும் எனத் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வந்தனர். இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்தேன். அது இன்று நடந்துவிட்டது.
கடைசி நாளில் ஆடுகளத்தில் சில இடங்களில் பிளவு இருந்தது. பிளவுபட்ட இடத்தில் பந்துபட்டதும், அதிகமான எழும்பியது, சுழன்றது. ஆனால், நான் ஒவ்வொரு ஷாட்களையும் மிகவும் நிதானமாக ஆடியதால், விக்கெட்டை இழக்கவில்லை”.
இவ்வாறு ரிஷப் பந்த் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT