Last Updated : 19 Jan, 2021 02:55 PM

3  

Published : 19 Jan 2021 02:55 PM
Last Updated : 19 Jan 2021 02:55 PM

இந்திய அணிக்கு ஜாக்பாட்; 5 கோடி ரூபாய் போனஸ் அறிவித்தது பிசிசிஐ: பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர் | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தொடர்ந்து 2-வது முறையாக வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.5 கோடி போனஸ் அறிவித்துள்ளது

பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை எந்த அணியும் வீழ்த்தியதில்லை என்ற வரலாற்றை மாற்றி இந்திய அணி இந்த வெற்றி மூலம் எழுதியுள்ளது.

இந்திய அணியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடுத்து ரூ.5 கோடி போனஸ் அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்திய அணியின் வெற்றியை அடுத்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “மறக்க முடியாத வெற்றி. ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டு, டெஸ்ட் தொடரை வென்றது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நினைவில் கொள்ளப்படும். இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பயணத்தில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுகள். இந்தத் தொகையைவிட வெற்றியின் மதிப்பு உயர்ந்தது” எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ஆஸி.யில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியக் கிரிக்கெட்டில் இது மறக்கமுடியாத தருணங்கள்.

இந்திய வீரர்கள் தங்கள் திறமையையும், குணத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி விட்டார்கள். போராட்டம், மன உறுதி ஆகியவற்றை இந்தத் தொடரில் இந்திய அணி வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தையும் இந்திய அணி ஈர்த்துவிட்டது. ரஹானே, ரவிசாஸ்திரி குழுவினருக்கு வாழ்த்துகள். குறிப்பாக சிராஜ், ரிஷப் பந்த், ஷுப்மான் கில் ஆகியோருக்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பெற்ற வெற்றியை நினைத்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய அணியின் குறிப்பிடத்தக்க ஆற்றல், உணர்ச்சிப் பெருக்கு தொடர் முழுவதும் இருந்தது. உறுதியான மனோதிடம், போராட்ட குணம் போன்றவற்றை இந்திய அணியினர் வெளிப்படுத்தினார்கள். எதிர்கால முயற்சிகளுக்கும், வெற்றிக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x