Published : 18 Jan 2021 02:50 PM
Last Updated : 18 Jan 2021 02:50 PM
என் தாயிடம் தொலைபேசியில் பேசியதுதான் எனக்கு மிகுந்த உற்சாகமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. என் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதில் நான் தீவிரமாக இருக்கிறேன் என இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் உருக்கமாகத் தெரிவித்தார்.
இந்திய அணிக்கான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற முகமது சிராஜின் தந்தை கடந்த நவம்பர் மாதம் உடல்நலக் குறைவால் திடீரென ஹைதராபாத்தில் உயிரிழந்தார்.
ஆனால், அந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இந்திய அணியுடன் இருந்த முகமது சிராஜ், தந்தையின் இறுதிச்சடங்கிற்குக் கூட செல்லாமல், அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார். முகமது சிராஜுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சக வீரர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.
அதன்பின் கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இடம் பெற்ற முகமது சிராஜ் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். பிரிஸ்பேனில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர் ஷமி, பும்ரா ஆகியோர் இல்லாத நிலையில், அணியின் பந்துவீச்சுக்கு சிராஜ் தலைமை ஏற்றுள்ளார். சிறப்பாகப் பந்துவீசிய சிராஜ், 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸி. அணியை 294 ரன்களில் சுருட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார்.
இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 328 ரன்கள் இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருப்பதால் இரு அணிகளுமே வெற்றிக்குக் கடுமையாக உழைக்கும், டிரா செய்யவும் முயற்சிக்கும்.
ஏனென்றால், கடந்த 1988-ம் ஆண்டுக்குப் பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்றதில்லை. அதேபோல, கடந்த 69 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் 236 ரன்களுக்கு மேல் எந்த அணியும் சேஸிங் செய்து வென்றதில்லை என்பதால், இந்தப் போட்டி விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
இந்நிலையில் முகமது சிராஜ் போட்டி முடிந்தபின் அளித்த பேட்டியில் கூறியதாவது:
''இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் கடினமான சூழலில் நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
நான் தாயிடம் தொலைபேசியில் பேசியபின்புதான் எனக்குள் நம்பிக்கையும், உற்சாகமும் வந்தது. என் தாயிடம் பேசியபின் நான் மனரீதியாக மிகவும் பலமடைந்தேன். என் நோக்கம் முழுவதும் மறைந்த என் தந்தையின் ஆசைகளை நிறைவேற்றுவதுதான்.
இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் தேசத்துக்காக ஆட வேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் மிக மிக மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவரின் ஆசிகள் எனக்கு இருக்கும் என்பதை உணர்கிறேன். எனக்குத் தெரியும். என்னுடைய ஆட்டத்தினால் என்னால் அதிகமாகப் பேச முடியவில்லை''.
இவ்வாறு சிராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT