Published : 30 Jun 2014 02:46 PM
Last Updated : 30 Jun 2014 02:46 PM
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் முதன்முறையாக காலிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது கோஸ்டா ரிகா. கிரீஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் அந்த அணி வென்றது.
ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா வீரர் பிரையன் ரூயிஸ் முதல் கோலை அடித்தார். இதனை 90 நிமிடங்களுக்குப் பிறகு கிரீஸ் வீரர் சாக்ரடீஸ் சமன் செய்தார்.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. இடைவேளைக்குப் பிறகு கோஸ்டா ரிகாவின் முக்கிய வீரர் ஆஸ்கார் டுவார்ட்டே இரண்டாவது மஞ்சள் அட்டை வாங்கி வெளியேறியதால் 10 வீரர்கள் கொண்ட அணியாக மாறிய கோஸ்டா ரிகா வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலைதான் இருந்தது.
கூடுதல் நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கிரீஸ் வீரர்கள் வாய்ப்புகளை விரயம் செய்தனர், அல்லது அது வாய்ப்புதான் என்றே தெரியாமல் ஆடினர் என்றே கூறவேண்டும்.
குறிப்பாக, கோஸ்டாஸ் மித்ரக்ளோ என்ற வீரர் கோலுக்கான அருமையான வாய்ப்பை கோலாக மாற்ற முடியவில்லை. பந்து தடுக்கப்படுவதை ஆயசமாகப் பார்க்க மட்டுமே முடிந்தது.
ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது. கோஸ்டா ரிகா தனது 5 பெனால்டி வாய்ப்புகளையும் கோலாக மாற்றியது, மாறாக கிரீஸ் வீரர் தியோ கேகாஸ் அடித்த ஷாட்டை கோஸ்டா ரிக்கா கோல்கீப்பர் கெய்லர் நவாஸ் அருமையாகக் கணித்து வலப்புறம் பாய்ந்து தடுத்தார்.
இதனால், கிரீஸ் தோல்வியுற்று அதிர்ச்சியடைந்தது. காலிறுதியில் கோஸ்டா ரிகா அணி, நெதர்லாந்து அணியைச் சந்திக்கிறது.
கடும் வெயிலில் இரு அணிகளுமே பாரம்பரிய முறையில் ஆடியது. தடுப்பு உத்தி பிரதானமாக இருந்தது. ஆனால், திடீரென கோஸ்டா ரிகா கிரீஸ் தடுப்பணையைத் தாண்டி எடுத்து சென்றது. அத்தகைய முயற்சியில் கோஸ்டா ரிகாவின் கிறிஸ்டியன் கம்போவா ஈடுபட்டு ஆனால் பந்தை கோலுக்கு வைடாக அடித்தார்.
கிரீஸ் அணி அதன் பிறகு சுதாரித்து எழுச்சியுற்றது. அந்த அணியின் சாக்ரடீஸ் கார்னர் ஷாட்டை தன் தலையா வாங்கி கோலாக மாற்ற முயற்சி செய்தார் முடியவில்லை. பிறகு கியார்கோஸ் கரகோனிஸ் சற்று தூரத்திலிருந்து ஒரு முயற்சி செய்தார். ஆனால் கோஸ்டா ரிகா கோல் கீப்பர் நவாஸ் எளிதில் பிடித்து விட்டார்.
இடைவேளைக்கு 8 நிமிடம் முன்பாக கோஸ்டா ரிகா தனது கோல் கீப்பர் நவாஸுக்கு நன்றி உடையவர்களானார்கள். கோஸ்டா ரீகாவின் ஜோஸ் ஹோலிபாஸ் ஒரு அற்புதமான பாஸை இடது புறமாகச் செய்ய, கிரீஸ் வீரர் சால்பின்கைடிஸ் தனது மார்க்கரின் கண்ணைக்கட்டி அந்த பாஸைத் தனதாக்கினார். நிச்சயம் கோல்தான் என்ற அந்த ஷாட்டை நவாஸ் காலால் தடுக்க பந்து வெளியே சென்று கிரீஸிற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அது முறியடிக்கப்பட்டது.
இடைவேளைக்குப் பிறகு 52வது நிமிடத்தில் கேம்பெல் பந்தை பலனோஸிற்கு அளிக்க அவர் பாக்ஸின் ஓரத்திற்கு பந்தை தள்ளி விட ரூயிஸ் அதனை கோல் வலைக்குள் செலுத்தினார். கோஸ்டா ரிகா முன்னிலை.
சரி! கோஸ்டா ரிகா காலிறுதியை உறுதி செய்தது என்று நினைக்கும் ஆட்ட முடிவு நேரம் வந்தது. இஞ்சுரி நேரம் 5 நிமிடங்கள் கிடைத்தது. இதில் முதல் நிமிடத்தில் கிரீஸ் கோல் அடித்துச் சமன் செய்தது. கிரேக்க வீரர் கேகாஸ் அடித்த ஷாட்டை கோஸ்டா ரிகா கோல் கீப்பர் நவாஸ் தடுத்தார். ஆனால் பந்து கட்டுப்பாடு இழந்து மீண்டும் நடுக்களத்திற்கு வர சாக்ரடீஸ் அதனை கோலாக மாற்றினார். கோஸ்டா ரிகாவின் இருதயம் சுக்கு நூறானது.
கொளுத்திய வெயிலின் தாக்கத்தில் கூடுதல் நேரத்திற்குச் சென்றது ஆட்டம். அதன் பிறகே பெனால்டி ஷூட் அவுட். இதில் வாய்ப்பைக் கோட்டைவிட காலிறுதியையே கோட்டை விட்டது. கோஸ்டா ரிகா வரலாறு படைத்தது.
கடும் வெயிலில் ஆடிய நெதர்லாந்து, காற்றின் ஈர்ப்பதம், கொளுத்திய வெயிலினால் ஏற்பட்ட கடும் உஷ்ணம் ஆகிய இடையூறில் ஆடிய கோஸ்டா ரிகா அணிகள் காலிறுதியில் வரும் சனிக்கிழமை மோதும்போது அவர்களிடம் ஏதாவது சக்தி மிச்சமிருக்குமா என்பது தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT