Published : 15 Jan 2021 11:55 AM
Last Updated : 15 Jan 2021 11:55 AM
பிரிஸ்பேனில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள தமிழக வீரர் நடராஜன் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். நங்கூரமிட்டு பேட் செய்த லாபுஷேன் விக்கெட்டையும் நடராஜன் சாய்த்தார்.
ஆஸி. அணி பேங்கிங்கில் திணறினாலும், அந்த அணி வீரர் லாபுஷேன் நங்கூரமிட்டு, அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார். 7 ஓவர்கள் வரை மட்டுமே வீசிய வேகப்பந்துவீச்சாளர் ஷைனி, தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு பந்துவீசாமல் பாதியிலேயே வெளியேறினார். இதனால் காயத்தால் மேலும் ஒரு வீரர் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிஸ்பேனில் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் தமிழக வீரர் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அறிமுகமாகினர். டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஒரு ரன்னில் வெளியேறினார்.
மிகவும் அருமையான லென்த்தில் இன்கட்டராக வந்த பந்தைத் தொடலாமா வேண்டாமா என்ற யோசனையில் வார்னர் தொட்டுவிட்டார். கேட்ச் பிடிக்க முடியாத வகையில் மிகவும் தாழ்வாக வந்த பந்தை ரோஹித் சர்மா லாவகமாகப் பிடித்து, முதல் விக்கெட் விழக் காரணமாக அமைந்தார்.
அடுத்து லாபுஷேன் களமிறங்கி, ஹாரிஸுடன் சேர்ந்தார். ஷர்துல் தக்கூர் பந்துவீச அழைக்கப்பட்டார். தாக்கூர் வீசிய முதல் ஓவர், அதாவது 9-வது ஓவரின் முதல் பந்தில் ஹாரிஸ் ஸ்குயர் லெக் திசையில் பிளிக் செய்ய முயலவே பந்து வாஷிங்டன் சுந்தர் கைகளில் தஞ்சமடைந்தது. ஹாரிஸ் 5 ரன்களில் தாக்கூர் பந்துவீச்சில் வெளியேறினார். இதுவரை டெஸ்ட் போட்டியில் 11 பந்துகளை மட்டுமே வீசியிருந்த தாக்கூர், தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
அடுத்துவந்த ஸ்மித், லாபுஷேனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சுக்கு தொடக்கத்தில் இருந்தே ஸ்மித் தணறினார். உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பின் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்பட்டார். நிதானமாக பேட் செய்துவந்த ஸ்மித் 36 ரன்களில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த மேத்யூ வேட், லாபுஷேனுடன் சேர்ந்தார். பொறுமையாக ஆடிய லாபுஷேன் 145 பந்துகளில் அரை சதத்தை நிறைவு செய்தார். அதன்பின் லாபுஷேன் ரன் ஸ்கோர் செய்யும் வேகம் அதிகரித்தது. அடுத்த 50 பந்துகளில் அதாவது 195 பந்துகளில் லாபுஷேன் சதம் அடித்தார்.
மேத்யூ வேட் அரை சதத்தை நெருங்கிய நேரத்தில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மேத்யூ வேட் 45 ரன்களில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடராஜன் வீழ்த்தும் முதல் விக்கெட்டாக இது அமைந்தது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 113 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
கேமரூன் க்ரீன், லாபுஷேனுடன் சேர்ந்தார். நடராஜன் வீசிய ஓவரில் ஷார்ட் பந்தை அடிக்க முயன்று ரிஷப் பந்த்திடம் கேட்ச் கொடுத்து லாபுஷேன் 108 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.
கேமரூன் 6 ரன்களிலும், பெய்ன் ரன் ஏதும் சேர்க்காமலும் களத்தில் உள்ளனர். ஆஸி. அணி 67 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT